விவசாய சேவைக்காக புதிய இணையதளம்!

விவசாயத்தில் பல இன்னல்கள், சோதனைகளைத் தாண்டி மகசூலை எடுத்தாலும், அதை பாதுகாப்பாக வைத்திருந்து சந்தைக்கு அனுப்புவது மிகவும் சவாலான விசயம். மழை, வெயில், பூச்சி, புழு தாக்குதல் போன்ற பிரச்னைகளில் இருந்து விளைபொருட்களைக் காப்பது மிக முக்கியமானது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கோவெஸ்த்ரோ என்ற நிறுவனம் ஒரு முன் முயற்சியை எடுத்துள்ளது. விவசாயப் பயன்பாட்டிற்கான பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் நமது நாட்டின் தோட்டக்கலை மற்றும் மீன்வளத்துறைகளில் ஏற்படும் அறுவடைக்குப் பின்பான இழப்புகளைக் குறைக்கும் வகையில் ஒரு புதிய உணவுப் பாதுகாப்புத் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. http://foodsecurity.covestro.com என்ற இந்த இணையதளமானது, அரசுத்துறை அதிகாரிகள், தொழில்துறை வல்லுநர்கள், விவசாயிகள் ஆகியோரின் கூட்டு முயற்சியாக அறிமுகம் ஆகியுள்ளது. அறுவடைக்குப் பின்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யவே இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இழப்புகள் குறைக்கப்படுவதோடு, வேளாண் உற்பத்தியின் மதிப்பு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை உலர்த்துவதற்கும், பயிரிடுவதற்குமான பசுமைக்குடில்கள், சோலார் ட்ரையர்கள், சோலால் கோல்டு ஸ்டோரேஜ், கையடக்க கோல்டு ஸ்டோரேஜ் ஆகியவற்றை இந்த நிறுவனம் பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளது. இந்நிலையில் இந்தப் புதிய உணவுப் பாதுகாப்பு தளம் விவசாயிகளுக்கு சேவை அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக அறுவடைக்குப் பின்பு எந்தெந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும். அதன் வாயிலாக தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நீண்டகாலம் பாதுகாக்கவும் முடியும்.விவசாயிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியும். என்ன விதமான புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த முடியும். அதோடு, இந்த இணையதளத்தில், பல உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

அவை சோலால் ட்ரையர், தட்ப வெப்பநிலைக் கட்டுப்பாடுடன் கூடிய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்தியாவின் தோட்டக்கலைத் துறையும், மீன்வளத்துறையும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 முதல் 20 சதவிகித அளவுக்கு அறுவடைக்குப் பின்பான இழப்புகளை எதிர்கொள்கிறது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கிறது. மதிப்புக் கூட்டலுக்கான வாய்ப்பும் பறிபோகிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப, புதுமையான தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என இந்நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

“புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் வாயிலாக விவசாயத்தில் நாங்கள் புதுமை களையும், வளர்ச்சியையும் கொண்டுவர விரும்புகிறோம். இதனால் சமூகம் பலன் அடையும். அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். நமது விவசாயிகளின் கடும் உழைப்புக்கு எங்களுடைய உணவுப் பாதுகாப்பு தளம் நிச்சயம் கூடுதல் மதிப்பைத் தரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் கோவேஸ்த்ரோவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சீனிவாசன். 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு