உடலுக்கு வலுவூட்டும் பிச்சாவரை!

நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் ஒரு நெல் ரகத்தையும், அதன் சிறப்புகளையும், அதனைப் பயிரிடும் முறை குறித்தும் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம்
பிச்சாவரை நெல் ரகம் குறித்து பகிர்கிறோம். பிச்சாவரை தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலூர் வட்டாரங்களில் அதிகம் பயிரிடக்கூடியது. இந்தப்பகுதிகளில் இன்றைக்கும் பல விவசாயிகள்பிச்சாவரை நெல் பயிரை சாகுபடி செய்து நல்ல மகசூல் பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரசாயனம் இல்லாத தரமான இயற்கை உரங்கள் மட்டுமே. குறிப்பாக நாட்டு மாட்டின் எரு, தொழுவுரம், மக்கிய காய்கறி குப்பைகள், பன்றி எரு என்று பல உள்ளது. வெள்ளப் பெருக்கு, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களையும் சமாளித்து வளரக்கூடிய பாரம்பரிய நெல் இது.

பிச்சாவரை நெல் விதைகளை நேரடியாக நிலத்தில் தூவி வளர்க்கலாம். 10 சென்ட் நிலத்தில் விதை நெல்லைத் தூவி அரை அடி வளர விடவும். இந்த நாற்றுகளை எடுத்து நிலத்தில் நடவு செய்தும் சாகுபடி செய்யலாம். அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான பின் தாளடி பட்டத்தில் சாகுபடி செய்ய உகந்தது. இதற்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிலத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். நாகப்பட்டினம் மட்டுமின்றி தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்தப் பயிர் இதே பருவத்தில் பயிரிடப்பட்டு வருகிறது. எல்லா விதமான நிலத்திலும் வளரக்கூடியது. எனவே, தமிழகம் முழுதுமே இதைப் பயிரிடலாம். முறையாக விதைநேர்த்தி செய்து, பாத்தி அமைத்து நாற்றங்கால் உருவாக்கி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்தால் அமோக விளைச்சல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ வரை விதை நெல் தேவைப்படும். விதையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து வடிகட்டி ஒரு நாள் நிழலில் வைக்க வேண்டும். பிறகு முளை கட்டிய விதையை சீராக தூவி விடவேண்டும். நெல் விதை மீது சீராக மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்த மண்ணை தூவிய பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிக வெயிலில் இருந்து நாற்றைப் பாதுகாக்க நாற்றங்காலை வைக்கோல் மூலம் மூடி வைப்பது நல்லது. இவ்வாறு நாற்றங்காலில் வளர்க்கும்போது 14 முதல் 15 நாட்களில் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் நாற்றுகள் வளர்ந்து நிற்கும்.

நடவு வயலை முன்னதாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தில் நன்கு தண்ணீர் விட்டு நான்கு உழவு ஓட்டி சமப்படுத்திய பிறகு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தற்போது எப்படி மாட்டு எரு பயன்படுத்தப்பட்டு வருகிறதோ அதைவிட பல மடங்கு பன்றி எருவை முற்காலத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பன்றி எரு காய்ந்த பின்பு நிலத்தில் தூவி விட்டால் மண்புழுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தும். மண்புழுக்களின் கழிவுகள் நிலத்திற்கு நேரடி உரமாக மாறும். இதோடு சேர்த்து பிச்சாவரை நாற்றுகளை நடவு செய்யும்போது ஏக்கருக்கு 50 கிலோ கடலைப் புண்ணாக்கு மற்றும் முப்பது கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரம் இட வேண்டும். நடவு செய்த 15வது நாளில் இரண்டாவது மேலுரம் போட வேண்டும். இதன்மூலம் நாற்றுகள் நல்ல ஊட்டத்துடன் வளரும். நிலமும் எப்போதும் இறுகாமல் பொலபொலப்பாக இருக்கும். பூச்சி பாதிப்புகள் அதிகம் இருந்தால் பஞ்சகவ்யம், வேப்பம் புண்ணாக்கு, மீன் எண்ணெய் போன்ற இயற்கை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தலாம். முறையாக களை நீக்கம் செய்ய வேண்டும். நிலத்திற்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சி வந்தால் பிச்சாவரை பொன்னாய் விளையும். 110 நாளில் நெற்பயிர் அறுவடைக்குத் தயாராகும். குறுகிய காலப் பயிர் என்பதால் நம்பி இதை விதைக்கலாம். ஒற்றை நடவு முறையில் சாகுபடி செய்தால் அதிகமகசூல் பெறலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சமாக 2 டன் வரை நெல் கிடைக்கும். இதை அரைத்து எடுத்தால் 1 டன் அரிசி கிடைக்கும்.

பிச்சாவரை பாரம்பரிய நெல் என்பதால் இதில் தாது உப்புக்கள் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும், இதில் உள்ள அயானிக் அளவிலான நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்கு வலுவூட்டும். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.பிச்சாவரையில் இட்லி, தோசை போன்ற டிபன்களும், முறுக்கு போன்ற பலகாரங்களும் செய்யலாம். உண்பதற்கு சற்றே வித்தியாசமான ருசியாகவும் இருக்கும். உடலுக்கும் மிகவும் ஏற்றது.

*பிச்சாவரை சாகுபடியில் ஏக்கருக்கு 2 டன் நெல் மகசூலாக கிடைக்கும்.அரிசியாக அரைத்தால் 1 டன் கிடைக்கும்.

*பிச்சாவரை அரிசி இட்லி, தோசைக்கு தோதாக இருக்கும். முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்தால் சுவையாக இருக்கும்.

 

Related posts

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்

சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை