வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்பு மாதிரிப்பண்ணை!

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்திற்கென தனியாக வேளாண் அறிவியல் நிலையம் துவக்கப்பட்டது. காளசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு புதிய நிர்வாக கட்டிடம், விவசாயிகள் தங்கும் விடுதி கட்டிடம், விவசாயிகளுக்கான மாதிரி பண்ணைகள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் துணை பொது இயக்குநர் உத்தம் சிங் கவுதம் கலந்துகொண்டு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் புதிய நிர்வாக மற்றும் விவசாயிகள் தங்கும் விடுதி கட்டிடங்களையும், இயற்கை வேளாண்மை தொடர்பான அங்கக இடுபொருட்கள் உற்பத்தி மாதிரி மையத்தையும் திறந்து வைத்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.என். செல்வக்குமார் வான்கோழி, காடை மற்றும் ஆடு வளர்ப்பிற்கான மாதிரிப் பண்ணைகளைத் திறந்து வைத்தார்.

ஹைதராபாத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்பப் பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஷேக் என் மீரா வணிக ஊக்குவிப்பு மையத்தின் மூலம் கருணைக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு வகைப் பயிர்களுக்கான விதை உற்பத்தி மாதிரிப் பண்ணையைத் திறந்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் அப்பா ராவ், சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோ, கள்ளக்குறிச்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விமலாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து விவசாயிகளுக்கான இயற்கை விவசாயம் குறித்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சில விவசாயிகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

உயிர்வேலி அமைக்க பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து கால்காணி இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் துவங்கி இயற்கை வேளாண்மை தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்சார்பு வாழ்வியலுக்கான நில வடிவமைப்பு களப்பயிற்சியை செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நுகும்பல் கிராமத்தில் உள்ள இயல் உணவு இயற்கை வழி வேளாண் பண்ணையில் நடத்தினர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இயற்கை உழவர்கள், தன்னார்வலர்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு உயிர் வேலி அமைப்பது குறித்தும், மரப்பயிர்கள், பழ மரங்கள், கொடிக் காய்கறிகள், செடிக் காய்கறிகள், மூலிகைகள், பூக்கள், கிழங்கு வகைகளை இயற்கை வழியில் எவ்வாறு பயிர் செய்வது என்பது குறித்தும் விளக்கம் தரப்பட்டது.

Related posts

முயற்சித்துப் பார் வெற்றி நிச்சயம்!

ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு