மழைக்கு செடியில் இருந்து விழுந்து தக்காளிகள் வீணாவதை தடுக்க கொடி கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள், செடிகளில் இருந்து தக்காளிகள், தரையில் விழுந்து அழுகி விடாமல் இருக்கவும் மழையில் இருந்து பாதுகாக்கவும் கொடி கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக மானாவாரி மற்றும் பல்வேறு காய்கறிகள் சாகுபடியே அதிகம் உள்ளது. அதிலும் காய்கறிகளில், தக்காளி சாகுடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதிலும், குறிப்பாக வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பல மாதமாக மழையில்லாததால், சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி சாகுபடி குறைய துவங்கியது. பின்னர், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சில நாட்கள் பெய்த கோடை மழைக்கு பிறகு, மீண்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட துவங்கினர். இந்நிலையில், சில வாரத்துக்கு முன்பிருந்து தென்மேற்கு பருவமழை பொழிவால், தக்காளி செடிகள் தழைத்து அதில் காய்ப்பு திறன் ஏற்பட துவங்கியது. இருப்பினும், வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் என்பதால்.

செடி கீழே சாயாமல் இருக்கவும், தக்காளியை காத்து கொள்ளவும் கொடி அமைக்கும் பணியில் பல கிராமங்களில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலும் வடக்கிபாளையம், பொன்னாபுரம், முத்தூர், சூலக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெட் நிலவரம்: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது புதிதாக தக்காளி சாகுபடி துவக்கத்தால், மார்க்கெட்டுக்கு உள்ளூர் நாட்டு தக்காளி வரத்து குறைந்து, அதன்விலை உயர துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 1 கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.15 ஆக இருந்தது. தற்போது 100 ரூபாயும் கடந்துள்ளது. இதில் நேற்றும் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவாக இருந்ததால், 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1300 முதல் ரூ.1400 வரை ஏலம் போனது. சராசரியாக ரூ.100க்கு விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து அதிகரிக்கும்போது, விலை குறைய வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு