25 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.8.18 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.18 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டம் மாவட்ட அளவில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்கீழ், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மூலம் செயல்படுத்தப்படும் என்றும், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் பொறியியல் பிரிவால் கட்டுமானப் பணிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் மேற்கொள்ளப்படும் என்றும், இத்திட்டத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் 25 உழவர் சந்தைகளில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் இயக்குநர் தெரிவித்தார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆராய்ந்து, தமிழ்நாட்டில் கீழ்க்காணும் பட்டியலில் உள்ள 25 உழவர் சந்தைகளின் அலுவலக அறை புதுப்பித்தல், கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், குடிநீர் அமைப்பு, பாதுகாப்பு சுவர், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், மின்னணு எடை வடிகால் மறுசீரமைப்பு, கூரை பழுது பார்த்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை ரூ.8.18 கோடி 54 லட்சம் செலவில் புனரமைக்க மாநில அரசு நிதியிலிருந்து செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்