நீர்நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நீர்நிலை பகுதியினை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செல்போன் டவர் மீது ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (58). இவரது நிலத்திற்கு அருகே கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பயிர் வைப்பதற்காக உழுது வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ராஜேந்திரன் அப்பகுதி வருவாய்துறையினரிடம் புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து வருவாய்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயி ராஜேந்திரன் கடம்பூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பினை அகற்றி சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீசார் 2 மணி நேரம் போராடி விவசாயி ராஜேந்திரனிடம் சமரசம் பேசியதன்பேரில் ராஜேந்திரன் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து, போலீசார் ராஜேந்திரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை