விவசாயிகள் மகிழ்ச்சி

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வழியாக பாயும் காவிரி ஆற்றின் நதிநீர் பங்கீடு நூறு ஆண்டுகளை கடந்தும் பிரச்னை தீரவில்லை. 1890ம் ஆண்டு மே 10ம் தேதி காவிரி பிரச்னை குறித்து மைசூர் சமஸ்தானம் சென்னை மாகாணத்துக்கும் இடையே முதல் பேச்சுவார்த்தை தொடங்கியது. பின்னர் 1892ல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924ம் ஆண்டு மீண்டும் பேச்சு நடத்தி 50 ஆண்டு காலத்துக்கு உடன்படிக்கை செய்யப்பட்டது.

பின்னர் 1970களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பாசன பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் நீர்ப்பாசன பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரி தீர்ப்பாயம் அமைத்தது. தீர்ப்பாயத்திடம் கர்நாடகா 465 டிஎம்சி, தமிழகம் 566 டிஎம்சி, கேரளா 99.8 டிஎம்சி, புதுவை 9.3 டிஎம்சி தண்ணீர் அளவு கேட்டது.

ஆனால் தீர்ப்பாயத்திடம் நியாயம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்துக்கு போனது தமிழக அரசு. 1980-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியை கணக்கிட்டு தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் 192 டிஎம்சி ஆகக் குறைந்து போனது. டிஎம்சி அளவில் ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் :15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5 என தண்ணீர் வழங்க அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாக கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையை கொடுத்து கணக்கை நேர் செய்ய வேண்டும் எனவும் கூறியது. கர்நாடக பகுதியில் அதிகமாக மழை பெய்தால் மட்டுமே அம்மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. டெல்லியில் இம்மாத துவக்கத்தில் கூடிய காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31ம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. இதனையும் கர்நாடக அரசு மறுத்து வந்த நிலையில் வருண பகவான் கருணையால் கர்நாடகா மற்றும் காவிரி படுகையில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. அணைக்கு வரும் உபரிநீர் காவிரியில் திறக்கப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்ட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயனடையும் மக்களுக்கு, இனிமேல் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும் ஏரி, குளங்கள் நிரம்பும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு