விவசாயிகளின் ஜாதி பெயரை போட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு வக்காலத்து; அண்ணாமலையின் பொய் அம்பலம்

சேலம்: பாஜ மாநில தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தபோது, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜவில் சேர்ந்தார். குருகிய காலத்தில் அவருக்கு தமிழ்நாடு பாஜ துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் புள்ளி விவரங்களுடன் அடித்து விடுகிறோம் என்ற எண்ணத்தில் தினமும் வாயிலேயே வடை சுட்டு வந்தார். அவர் பேசுவதெல்லாம் பொய் என்று ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டிலடித்து வருகின்றனர். அவரின் பொய் லிஸ்டுக்களை எடுத்தால் பட்டியல் போட நீண்ட நேரமாகும்.

காரணம், தினமும் ஒரு பொய்தான் அவருடைய ஸ்பெஷாலட்டி. பொய்கள் அம்பலமானால் சிறிது காலம் அட்ரஸ் இல்லாமல் இருப்பார். அவர் கூறிய பொய்க்கு ஆதாரம் கேட்டால், அவரே ஒரு நாளை குறித்து அன்று சொல்வதாக சொல்வார். ஆனால், எஸ்கேப் ஆகிவிடுவார். உதாரணத்துக்கு ரபேல் வாட்ச், 2 லட்சம் எப்ஐஆர், 20 ஆயிரம் புத்தகங்கள் வாசிப்பு, 1.80 லட்சம் பிஜி நீட் இடங்கள், அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து சர்ச்சை, காமராஜர் பிறகு தமிழ்நாட்டில் அணையே கட்டவில்லை என கூறியது என்று இப்படி பட்டியல் பெரிதாக போய்கொண்டே இருக்கும். இவருடைய நம்பிக்கையே என்னவென்றால் அவர் கூறுவதை மக்கள் யாரும் ஆராய மாட்டார்கள் என்பதுதான். அரசியலில் வரலாறு ரொம்ப முக்கியம். அண்ணாமலையின் பொய் லிஸ்ட்டில் சேலத்தில் நடந்த 2 சம்பவங்களும் இணைந்து உள்ளன.

சேலத்தில் ஏழை விவசாயிகளுக்கு இடத்தை பாஜ நிர்வாகி அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜ நிர்வாகி தூண்டுதலின் பேரில் விவசாயிகளின் ஜாதி பெயர் போட்டு அவர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அப்போது அவர்களின் ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தியதாக அனைத்து கட்சிகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது. சேலம் வந்த அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேட்டியளித்தார். எப்ஐஆரில் பெயர், அட்ரஸ், தொழில், ஜாதி என எழுத காலம் இருக்கிறது என கூறினார். ஆனால் எப்.ஐ.ஆரில் இதுபோன்ற ஜாதிக்கென தனியாக காலமே கிடையாது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தான் ஐபிஎஸ் படித்திருப்பதால் எல்லாமே தனக்குத் தெரியும். தான் என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற எண்ணத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி வருகிறார். அவர் கூறுவதுபோல எப்ஐஆரில் ஜாதிக்கென தனியாக காலமே கிடையாது. படித்த இளைஞர்கள் இருக்கும் இந்த காலத்தில் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என நினைத்துக் கூறுவதை அவர் நிறுத்த வேண்டும்’ என்றனர். இதற்கான ஆதாரங்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். குறிப்பாக 2 லட்சம் எப்ஐஆர் போட்ட ஐபிஎஸ் அண்ணாமலைக்கு எப்ஐஆரில் என்ன இருக்கும் என்பது கூடவா தெரியாது என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதேபோல் பெரியார் பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசியவர், ‘பல்கலைக்கழகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சில ஆவணங்களை காட்டி, துணைவேந்தர் மீது கைது நடவடிக்கை எடுத்தது தவறு எனக்கூறினார். இதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளிக்கும்போது, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியாயமானவர் எனக்கூறியிருக்கிறார். அவர் தெரிந்து சொன்னாரா? தெரியாமல் சொன்னாரா? எனத்தெரியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டாக துணைவேந்தர் மீது நாங்கள் குற்றச்சாட்டை கூறி வருகிறோம். எங்கள் சங்க சட்ட ஆலோசகர் கொடுத்த புகாரில் கைதாகியுள்ளார்.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பெரியார் பல்கலைக்கழக சிசிடிவி வீடியோ காட்சிகள், சில ஆவணங்கள் எப்படி அவருக்கு கிடைத்தது. துணைவேந்தரின் ஜாமீன் ரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, இந்த பல்கலைக்கழக சிசிடிவி காட்சிகள் முக்கிய சாட்சியாக விளங்கும். அப்படி இருக்கையில் எப்படி அண்ணாமலைக்கு கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும். மேலும் வரும் 12ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, உரிய முறையில் தெரியப்படுத்துவோம்,’’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது