விவசாயிகளை மகிழ்விக்கும் வேளாண் பட்ஜெட் – 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உழவர் நலனுக்கென தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டதோடு, விவசாயத்திற்கென பிரத்யேகமாக பட்ஜெட்டும் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த வாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட் குறித்து தெரிவித்த சில முக்கிய தகவல்களின் சுருக்கம்.
*வழக்கில் இருந்து மறைந்து போன மற்றும் அழியும் தருவாயில் இருந்த பல்வேறு மரபுசார் நெல் ரகங்களைத் தேடி, சேகரித்து மீட்டுருவாக்கம் செய்தவர் நெல் ஜெயராமன். அவரது பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
*கடந்த 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
*வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
*சிறு, குறு தொழில்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனம் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்கப்படும்.
*அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவுச் செடிகள் விற்பனை மையம் அமைக்கப்படும்.
*மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.
*10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுகைகள் வழங்க ரூ.6 கோடி மானியம்.
*தென் மாவட்ட மழை பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும்.
*2 லட்சம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
*2,482 ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
*25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க அரசு பொறுப்பேற்று இருக்கிறது.
*ஆடா தொடா, நொச்சி நடவு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
*வேளாண்மை மாதிரிப் பண்ணையை ரூ.38 லட்சத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் உருவாக்க நடவடிக்கை.
*பயிர் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.

*இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி.
* முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு. 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு. உயிர்ம வேளாண்மைமாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 இலட்சம் நிதி ஒதுக்கீடு. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
*சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப் பயிரிட நிதி உதவி. பயிர் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.
*துவரை சாகுபடி பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க நடவடிக்கை.
*பயிர் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கராக விரிவாக்கம் செய்ய ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு

* ரசாயன உரங்கள் பயன்பாட்டினைக் குறைத்தல் – மண்வள அட்டை வழங்குதல் ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும்.
*ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.
*எண்ணெய் உற்பத்தியை உயர்த்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, சூரிய காந்தி பயிரிடுவதை அதிகரிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

*பாரம்பரிய நெல் ரக பாதுகாப்பு, உற்பத்திக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.
*நெல்லுக்கு மாற்றுப் பயிர் பயிரிட ரூ.12 கோடி ஒதுக்கீடு.
*நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
*உதகை ரோஜா பூங்கா மேம்படுத்தப்படும்.

* 15,280 கிராமங்களில் ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் செயல்படுத்தப்படும்.
*பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1775 கோடி நிதி ஒதுக்கீடு.
*ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
*வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
* எண்ணெய் வித்துகள் உற்பத்திக்காக ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு. நிலக்கடலை விவசாயிகளுக்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி.
* கரும்பு விவசாயிகளுக்கு ரூ.250 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.
*தாழ்த்தப்பட்ட, பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி மானியம்.
*சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.51 கோடி ஒதுக்கீடு.
*செங்கல்வராயன் சர்க்கரை ஆலைக்கு ரூ.6.31 கோடி நிதி உதவி.
*பருத்தி உற்பத்தி 5.5 லட்சம் பேல்களாக அதிகரிக்கப்படும்.

*கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
*ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.36.15 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

*ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
*கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
* 12,000 விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் அமைக்க மானியம்.
*சர்வதேச தோட்டக்கலைப் பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.
*முக்கனி மேம்பாட்டு சிறப்பு திட்டத்துக்கு ரூ.41.35 கோடி நிதி ஒதுக்கீடு.
*விவசாயிகளுக்கு 7 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
*தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
*ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
*சூரிய காந்தி, செம்பருத்தி, ரோஜா உற்பத்திக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு.
*ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.
*புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
*முல்லைப் பூங்கா கன்னியாகுமரியிலும், மருதம் பூங்கா தஞ்சை திருமலை சமுத்திரத்திலும் அமைக்கப்படும்.
*கன்னியாகுமரியில் ரூ.2 கோடியில் சூரிய தோட்டம் அமைக்கப்படும்.
* புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
*உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு.
*முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
*பாரம்பரிய காய்கறிகளை மீட்டெடுக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
*பந்தல் காய்கறி திட்டத்தை ஊக்கப்படுத்த ரூ.9.4 கோடி மானியம்.
*மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியைக் கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
*பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும் ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.
*பேரீச்சை பழம் சாகுபடிக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு. பேரீச்சை சாகுபடிக்கு 1 ஏக்கருக்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படும்.
*நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.
*சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
*10,000 விவசாயிகளுக்கு கைபேசியில் இயங்கும் மோட்டார் வழங்கப்படும்.
*ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
*விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
*கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவரி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
*ஈரோடு, கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும், 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு ‘சி’ ‘டி’ பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
*மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம் சாகுபடியை இயந்திரமயமாக்கல் மூலம் செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு.
*நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, சத்துக்கள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்களை உருவாக்கிட நிதி ஒதுக்கீடு.
*ஆடு, கோழி வளர்ப்போருக்கு ரூ.200 கோடி வட்டி மானியம் வழங்கப்படும்.
இதுபோல் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு