ஊட்டி அருகே பயிர்களை காக்க மனித உருவத்திலான தட்டிகள் வைத்த விவசாயிகள்

ஊட்டி : ஊட்டி அருகே சாந்தூர் பகுதியில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் தொல்லையில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க மனித உருவத்திலான தட்டிகளை வைத்து அவற்றை விரட்டும் நூதன முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதில், அதிகபட்சமாக கேரட் 2,200 ஹெக்டேர் பரப்பளவிலும், உருளைக்கிழங்கு 1200 ஹெக்டா் பரப்பளவிலும், முட்டைக்கோஸ் 900 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்படுகிறது. கேரட் விவசாயத்தில் அதிக மகசூல், நல்ல லாபம் கிடைத்து வருவதால், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக வீரியரக கேரட் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக இருப்பதால் காட்டு மாடுகள், பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது. மேலும் விவசாய நிலங்களும் வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அவை உணவு தேடி விளை நிலங்களுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இது தவிர அவரை, பட்டாணி உள்ளிட்ட கொடி வகை பயிர்களை பறவைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் தொல்லையால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பல்வேறு நூதன யுக்திகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். கண்ணாடி பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலியால் பறவைகள் விவசாய நிலத்திற்குள் வராது. வனவிலங்குகளும் இந்த வினோத ஒலியால் அஞ்சி அப்பகுதிக்கு வராது. இதேபோல் தோட்டத்தில் ஆட்கள் இருப்பது போல் பொம்மைகள் செய்து கட்டி வைப்பார்கள்.
இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள சாந்தூர் பகுதியில் மலைக்காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் பிளேவுட் அட்டைகளை கொண்டு மனித உருவில் உருவாக்கி விவசாய நிலத்தில் பல இடங்களிலும் நிறுத்தி உள்ளனர். தொலைவில் இருந்து பார்க்கும்போது மனிதர்கள் இருப்பது போன்றே அச்சு அசலாக காட்சியளிக்கின்றன. இதனால் பீன்ஸ், பட்டாணி, அவரை, கொடி அவரை போன்ற பூ பூத்து காய் காய்க்கும் பயிர்களை பறவைகள் சேதப்படுத்துவது குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் விவசாய நிலத்திற்கு அருகாமையில் வனங்கள் உள்ளன. இந்த வனங்களில் இருந்து காட்டு மாடு, குரங்கு, பன்றி உள்ளிட்டவைகள் விவசாய நிலத்திற்கு வருவது வாடிக்கை. இதனால் பயிர் சேதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் பொருட்டு மனித உருவத்திலான தட்டிகளை விளை நிலத்தில் பல இடங்களிலும் பொருத்தியுள்ளோம். இதன் மூலம் மனிதர்கள் வேலை செய்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தால் வனவிலங்குகள் வருகை குறைந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ், அவரை போன்றவற்றில் பூக்களை சேதப்படுத்தி விளைச்சலை பாதிக்கிறது. இந்த தட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், பறவைகள் வருவதே இல்லை. இதன் மூலம் பயிர்களை காப்பாற்றி வருகிறோம்’’ என்றனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு