விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி நலத்திட்ட உதவிகள்: மாவட்ட கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 32 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று கைவண்டூர் ஏரியில் கரை சமன்படுத்தியதற்கும், பொன்னேரி வட்டத்தில் இறால் பண்ணைகளை சுற்றி அமைந்துள்ள சாகுபடி வயலில் தேங்கிய நீர் வெளியேறுவதற்கு வழிவகை அமைத்து கொடுத்ததற்கும் பொன்னேரி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பாகவும், மனுதாரர் சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக வேளாண் இயந்திரமயமாக்களின் உப இயக்ககம் திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு ரூ.10.10 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருள்களும் வேளாண்துறை மூலம் 2 விவசாயிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பாரம்பரிய நெல் ரக விதைகளையும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 5 விவசாயிகளுக்கு வேளாண் அடையாள அட்டைகளையும் தோட்டக்கலை துறை மூலம் 9 விவசாயிகளுக்கு ரூ.30,400 மதிப்பீட்டிலான பழ மரக்கன்றுகளையும் தாட்கோ திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் ஆயிரம் மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் ரூ.18.25 லட்சம் மதிப்பீட்டிலான இலவச மின் இணைப்புகளையும், கூட்டுறவுத்துறை மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.3.26 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகளையும் வழங்கினார்.

மேலும் வேளாண் இயந்திரமயமாக்குதலின் உப இயக்ககம் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு வங்கி கடன் உதவியாக ரூ.1.09 கோடிக்கு மானிய தொகை ரூ.46.20 லட்சம் உட்பட வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான காசோலையையும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம், கிரைன்ஸ் வலை தளத்தில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, ஒருங்கிணைந்து 5,01,361 பட்டா விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 92 சதவீதப் பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 45,881 பட்டா பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விடுபட்ட 6474 விவசாயிகள் 14 வது தவணைத்தொகை பெறுவதற்கு கட்டாயம் பிஎம் கிசான் இணைய தளத்தில் நில ஆவணங்கள் பதிவேற்றம் ஆகியவற்றை பதிவு செய்வது கட்டமாயக்கப்பட்டுள்ளதால் விவசாயப் பெருமக்கள் உடனடியாக பொதுச்சேவை மையங்களை அணுகி தங்கள் கைவிரல் ரேகை பதித்து ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து தேவையான விவரங்களை விடுபடாமல் பதிவேற்றம் செய்து பயன்பெற கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உழவர் கடன் அட்டை பெறாமல் விடுபட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மை உழவர் நலத்துறை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை அணுகி விண்ணப்பித்து உழவர் கடன் அட்டை பெற்று விவசாயப்பணிகள் தொய்வின்றி முடித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். நடப்பாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் சாகுபடி வயல்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில், சுமார் 120 விவசாயிகள் பதிவு செய்து அதில் 80 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, 15 ஆயிரத்து 39 கனமீட்டர் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொண்டார்.

வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி கோரும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட ஏரியின் பெயரைக் குறிப்பிட்டு உரிய நில ஆவணங்கள், கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றை இணைத்து மனு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நடப்பாண்டிற்கு நெல், எண்ணெய் வித்துகள், பயறுவகைகள் மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றின் ஆதார விதைகள் மற்றும் சான்று நிலை விதைகளுக்கான கொள்முதல் மற்றும் விற்பனை விலை தமிழ்நாடு மாநில விதை வளர்ச்சி முகமையின் மூலம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த ஜூலை 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே 24.7.2023 க்கு பிறகு விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் புதிய விதை விலை திட்டம் மூலம் தங்களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்தும், மானியவிலையில் விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றும் பயனடைய கேட்டுக்கொண்டார்.

இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விவசாயிகளிடமிருந்து 133 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுகபுத்ரா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, உதவி வன பாதுகாப்பாளர் ராதை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி, துணை கலெக்டர் (பயிற்சி) சுபலட்சுமி, துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) தபேந்திரன், விவசாயிகள், விவசாயி சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் வேளாண் சார்ந்த பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது