மதனப்பள்ளி அருகே பரபரப்பு விவசாயியை அடித்துக்கொன்று தக்காளி விற்ற ரூ.30 லட்சம் கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலை வீச்சு

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தில் வசிப்பவர் ராஜசேகர்(62), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். மேலும் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்தார். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வு காரணமாக ராஜசேகருக்கு கடந்த 20 நாட்களில் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், இரவு ராஜசேகர் வழக்கம்போல் மாடுகளில் பால் கறந்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் ராஜசேகரை திடீரென வழிமறித்துள்ளனர்.

பின்னர் அவரது கை, கால்களை கட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ராஜசேகரின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரமாகியும் ராஜசேகர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விடிய விடிய தேடினர். நேற்று முன்தினம் மதியம் ராஜசேகர் கொலையான சம்பவம் அறிந்து கதறி அழுதனர். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது சடலம் அருகே ரூ.30 லட்சத்திற்கு தக்காளி விற்றதற்கான ரசீது இருந்தது. எனவே மர்ம ஆசாமிகள், ராஜசேகர் தக்காளி விற்று பணம் பெற்று வருவதை நோட்டமிட்டு அவரை அடித்து கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு