நடுப்பட்டு கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி: போலீசார் விசாரணை

உத்திரமேரூர்: நடுப்பட்டு கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரமேரூர் அருகே பெருநகர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (65). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், நெற்பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்று மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, மோட்டார் இயங்கவில்லை.

இதனால், வேணுகோபால், மின் வாரிய ஊழியர்களுக்கு அறிவிப்பு தெரிவிக்காமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து பழுது நீக்கியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி வேணுகோபால் தூக்கி வீசப்பட்டார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர், விவசாயி வேணுகோபாலை மீட்டு உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், வேணுகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருநகர் போலீசார், ரேணுகோபாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி