விவசாயிகளை மகிழ்வித்த வயல் விழா!

புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் சார்பில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளில் அதிக மகசூல் பெற புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும், புதிய ரகங்கள் கண்டுபிடிப்புகள் குறித்தும் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மணல்மேல்குடி வட்டாரத்தில் உள்ள கம்பர் கோயிலில் வயல் விழா என்ற ஒரு நேர்த்தியான விழா நடத்தப்பட்டது. இந்த விழா, நேரடி நெல் விதைப்பில் அதிக மகசூல் பெறுவதற்கு விதை நேர்த்தி செயல் விளக்கம் அளிக்கும் வகையில் நடத்தப்பட்டது. விழாவில் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் யுவராஜா வரவேற்றார்.

மணல்மேல்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் சுப்ரமணியன், ஆடுதுறை நெல் ரகங்களின் சிறப்புகள் பற்றி விளக்கினார். மேலும், டிஎன்ஏயூ விதை அமிர்தம் கொண்டு நேரடி நெல் விதைப்பில் விதை நேர்த்தி செய்து பயன்பெற வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மையத்தின் இயக்குநர் முனைவர் உமாராணி, டிஎன்ஏயூ விதை அமிர்தத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். விதை அறிவியல் துறை பேராசிரியர் ராஜா, இணைப் பேராசிரியர் மேனகா ஆகியோர் நேரடி நெல் விதைப்பில் விதை அமிர்த விதை நேர்த்தி மூலம் கிடைக்கும் பயன்பாடுகள் குறித்து வயல்வெளியில் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது விவசாயிகள் வயல்வெளியில் இறங்கி நேரடியாக செயல்விளக்கம் பெற்று பலன் அடைந்தனர். மொத்தத்தில் விவசாயிகளின் விழாவாகவே இருந்தது இந்த வயல் விழா.

விதை அமிர்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விதை அமிர்தம் என்ற பெயரில் விதை நேர்த்திக்கான தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு விளக்குகிறார்கள். பல்வேறு அங்ககப் பொருட்கள் அடங்கிய விதை அமிர்தம் மூலம் விதை நேர்த்தி செய்தால் விதைப்புத்திறன் மேம்படும், பயிர்கள் செழிப்பாக வளரும் என்கிறார்கள் வேளாண் அதிகாரிகள்.

Related posts

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு