பீன்ஸ்-க்கு நோ சான்ஸா? சவாலில் சாதித்த தர்மபுரி விவசாயி

தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடும் மாவட்டங்களில் தர்மபுரியும் ஒன்று. அதிலும் அங்குள்ள பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் வெயில் இன்னும் கூடுதலாகவே வாட்டி எடுக்கும். இந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர், மலைப்பிரதேசங்களில் விளையும் பீன்ஸைப் பயிரிட்டு நல்ல மகசூல் எடுத்து வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் பொதுவாக மழைக்காலங்களில் நெல், மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் பரவலாக பயிரிடப்படும். மேலும் சில காய்கறிப் பயிர்களும் இந்த மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்களின் அன்றாட காய்கறித் தேவைக்கு அது போதுமானதாக இருக்காது. மக்களின் காய்கறிகள் தேவைக்கு ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துவந்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணியம்பாடி மாரியம்மன் நகரைச் ேசர்ந்த ராஜா பீன்ஸ் சாகுபடி மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த தகவல் அறிந்து ராஜாவைச் சந்திக்கச் சென்றோம். பச்சைப் பசேலென பரந்து விரிந்த பீன்ஸ் வயலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜா நம்மை வரவேற்றுப் பேசத்தொடங்கினார்.

‘‘இந்தப்பகுதியில் எனக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தக்காளி, பச்சை மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். இந்தப் பயிர்களில் அதிக மகசூல் எடுத்து வருவதால் தோட்டக்கலைத்துறையினர் என்னைப் பாராட்டுவார்கள். பல வெளியூர் விவசாயிகளை அழைத்து வந்து எனது தோட்டத்தில் செயல்விளக்கம் காண்பிப்பார்கள். நான் டிராக்டர் மூலம் உழவு ஓட்டும் பணியையும் செய்து வருகிறேன். அவ்வாறு செல்லும்போது சில வித்தியாசமான விவசாய முயற்சிகளைப் பார்ப்பேன். அதைப்போல நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பேன். அவ்வாறு உதித்ததுதான் பீன்ஸ் ஐடியா, இதை எனக்கு தெரிந்தவர்களிடம் சொன்னேன். அப்போது, பீன்ஸ் உள்ளிட்ட உயர் ரக காய்களை விவசாயம் செய்ய இங்கு போதுமான தட்பவெப்ப நிலை இல்லை. இதனால் இப்பகுதியில் பீன்ஸ் செடி வருவதற்கே வாய்ப்பே இல்லை என பலர் தெரிவித்தார்கள். பாலக்கோடு பகுதியில் நல்ல தட்பவெப்ப சூழல் இருக்கும். அங்கு செய்தாலும் பரவாயில்லை. நம்ம பகுதிக்கு பீன்ஸ் செட்டே ஆகாது என்றே பலர் தெரிவித்தனர். ஆனாலும் நான் எனது முயற்சியைக் கைவிடவில்லை. சோதனை முயற்சியாக ஒருஏக்கர் விவசாய நிலத்தில் 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பீன்ஸ் செடி நடவு செய்தேன். அதன்பிறகு வேளாண் அதிகாரிகள் வழங்கிய அறிவுரைப்படி அதனை வளர்த்து வந்தேன். அவர்கள் பல்வேறு பயிற்சிகளையும் வழங்கினர். இப்போது பீன்ஸ் சாகுபடி வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறது’’ என பேச ஆரம்பித்த ராஜா மேலும் தொடர்கிறார்.

“பீன்ஸ் சாகுபடிக்கு கார அமிலத்தன்மை மிகவும் முக்கியம். முதலில் இந்த தன்மைக்கேற்ற மண்ணாக எங்களது நிலத்தை மாற்றினோம். அதன்பிறகு 5 கலப்பை கொண்டு நிலத்தை 4 முறை நன்றாக உழுதோம். பின்பு ரோட்டோவேட்டர் கொண்டு நிலத்தை சமன்படுத்தினோம். கடைசி உழவின்போது 5 டிராக்டர் தொழுவுரத்தை இட்டோம். நிலத்தைத் தயார் செய்தபின்பு சொட்டுநீர்ப் பாசன அமைப்பை நிறுவினோம். ஓசூரில் ஒரு கடையில் தரமான பீன்ஸ் விதை கிடைக்கும் என சிலர் கூறியதன் பேரில் அங்கு சென்று விதை வாங்கி வந்தேன். அந்த விதைகளை மண்ணில் மறைந்து போகும் அளவுக்கு ஊன்றினோம். செடிக்கு செடி 3 அங்குலம் என்றும், வரிசைக்கு வரிசை 4.25 அடி என்றும் இடைவெளி இட்டோம். வரிசைக்கு வரிசை இந்த இடைவெளி இருந்தால்தான் செடிகளுக்கு இடையில் நடந்து சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியும். இது சமவெளி என்பதால் ஏக்கருக்கு 50 கிலோ விதையைப்
பயன்படுத்தினோம்.

விதை ஊன்றியவுடன் சொட்டுநீர் மூலம் பாசனம் செய்தோம். பின்னர் தேவையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை என நீர்ப் பாய்ச்சி வருகிறோம். அடிக்கடி தொழுஉரம் வைத்து தேவையற்ற களைகளை நீக்கி பராமரித்தால் அதிக மகசூல் பெறலாம். விதை ஊன்றிய 15வது நாளில் செடிகள் நன்றாக தளதளவென வளர்ந்திருக்கும். அப்போது பவர்டில்லர் மூலம் செடிகளுக்கு மண் அணைப்போம். அதேபோல நிலத்தில் பந்தல் அமைக்கும் பணியையும் தொடங்குவோம். அதாவது நிலத்தில் 6 அடி இடைவெளிகளில் சவுக்கு மரக் கம்புகளை நட்டு, அதன்மேல் நரம்பு கொண்டு பந்தல் அமைப்போம். நரம்புக்கு இடையில் சணல் கயிறுகளைக் கட்டி வைப்போம். கொடிகள் வளர வளர சவுக்குக் கம்புகள் மூலம் பந்தலில் ஏறி படர ஆரம்பிக்கும். ஒன்றரை மாதத்தில் அதாவது 45வது நாளில் கொடிகள் அனைத்து பந்தலிலும் படர்ந்துவிடும்.

எனக்கு முதல் சாகுபடி என்பதால் வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி உரம், மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறேன். உரங்களைப் பெரும்பாலும் சொட்டுநீர்ப் பாசனத்தில் கொடுத்து விடுவேன். இது எளிதாகவும், உரம் விரயம் ஆகாமலும் செடிகளுக்கு கிடைக்க ஏதுவாகிறது. பீன்ஸ் பயிரில் இலைப்பேன் தொல்லை இருக்கும் என்கிறார்கள். பிஞ்சு வரும் நேரத்தில் புழுக்கள் வரும் என்றும் சொல்கிறார்கள். இதற்கும் வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையே தீர்வு தருகிறது. இவ்வாறு பராமரித்து வரும் நிலையில், 55-60வது நாளில் இருந்து பீன்ஸில் அறுவடையைத் தொடங்கலாம். இப்போது நான் தினமும் அறுவடை செய்து வருகிறேன். நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. எப்படியும் மொத்தமாக 6 டன் பீன்ஸ் அறுவடையாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இப்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40 முதல் 60 வரை விலை போகிறது. இன்றைய தினம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90 என போகிறது. குறைந்தபட்சமாக ரூ.40 கிடைத்தாலும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் செலவானாலும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் லாபமாக கிடைக்கும். அறுவடை செய்யும் காய்களை தர்மபுரி மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறோம். அங்கு வியாபாரிகள் உரிய தொகை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் மாலை நேரத்தில் அறுவடை செய்து, அப்போதே எடுத்துச் செல்கிறோம். இல்லையென்றால் மறுநாள் அதிகாலையில் 2 மணிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வோம். எந்தக் கடைக்கு எவ்வளவு தேவை என கேட்டு திட்டமிட்டு அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து செல்கிறோம். இதனால் ஒரு காய் கூட எங்களுக்கு வீணாவதில்லை’’ என மகிழ்ச்சியோடு பேசுகிறார் ராஜா.
தொடர்புக்கு:
ராஜா: 98659 85442

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு