இப்படித்தான் இருக்கணும் ஒருங்கிணைந்த பண்ணை!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் பெயர் கம்மவான்பேட்டை. இந்தக் கிராமத்திற்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயர் ராணுவப்பேட்டை. இந்த ஊரில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அதில் 95 சதவீதம் குடும்பங்கள் ராணுவக்குடும்பங்களாக இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு வீட்டிலும் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்திய அளவில் ஒரு சிறப்பு மிக்க கிராமமாக திகழ்கிறது இந்த கம்மவான்பேட்டை. ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பும் பல வீரர்கள் தங்களுக்கு பிடித்த தொழில், பணிகளை செய்து வருகிறார்கள். கமலமுருகன் என்ற முன்னாள் ராணுவ வீரர் விவசாயத்தைக் கையில் எடுத்து, அதனை பலரும் வியக்கும் வண்ணம் செய்து வருகிறார் ராணுவப்பேட்டையைச் சேர்ந்த கமலமுருகன்.இவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்துடன் கூடுதலாக 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அதில் ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வருகிறார். 3 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் தென்னை, தென்னையில் ஊடுபயிராக மஞ்சள், கருணைக்கிழங்கு பயிரிட்டு வருகிறார். பண்ணையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கமலமுருகனை சந்தித்தபோது, உற்சாகமாக பேசத் தொடங்கினார்.

“ எங்கள் கிராமம் முழுக்கவே ராணுவ வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் ராணுவக்குடும்பமாக இருந்தாலும், விவசாயத்தை எல்லோரும் ஆர்வமாக செய்துவருகிறோம். நானும் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன்தான். எனது தாத்தா காலத்தில் நெல், கரும்பு, வாழை என அனைத்தும் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக எனது அப்பாவும் அதே பயிர்களை சாகுபடி செய்தார். நான் ராணுவத்தில் இருந்து வந்தவுடன் விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொண்டேன். ராணுவத்தைப்போல விவசாயமும் ஒரு சேவைப்பணிதான். காவல் பணிக்கு அடுத்து எனக்குத் தெரிந்தது விவசாயம்தான். இதனால்தான் நான் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கி எனது கிராமத்திற்கு திரும்பி விவசாயத்தில் இறங்கி இருக்கிறேன். 2013ம் ஆண்டில்தான் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வில் கிராமத்திற்கு வந்தேன். இங்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைத்த நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். அங்கு சென்றதும் பல விவசாயிகளின் தொடர்புகள் கிடைத்தது. நாட்டுக்கோழி வளர்ப்பை தெரிந்துகொண்ட அதே நேரத்தில் பல விவசாயிகளின் வயலுக்கு நேரில் சென்று, அவர்கள் சாகுபடி செய்யும் முறையைப் பற்றி தெரிந்துகொண்டேன். அப்போது சில இடங்களில் நான் கண்ட ஒருங்கிணைந்த பண்ணைகள் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டன. அவை என்னை ஈர்த்ததால், நானும் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க வேண்டும் என விரும்பினேன்.

தமிழ்நாடு அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பில் கலந்துகொண்டதன் வாயிலாக, மானியத்தில் 300 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் கிடைத்தன. அதனை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். அதற்கு அடுத்தபடியாக ஆடு, மாடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து இப்போது நெல், வாழை, கருணைக்கிழங்கு, தென்னை, கீரை வகைகள், காய்கறிகள், சிறுதானியப் பயிர்கள், மூலிகைச்செடிகள் என பல வகையான பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். தென்னையைப் பொருத்தவரை 2 ஏக்கரிலும் சேர்த்து 320 மரங்கள். நாட்டுக்கோழிகள் 300க்கு மேல் இருக்கின்றன. சமீப காலமாக முயல் வளர்க்கத் தொடங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் 4 முயல்கள் வாங்கினேன். இப்போது 30 முயலுக்கு மேல் இருக்கிறது. இதன் உற்பத்தியை பெருக்கி மொத்தமாக விற்பதற்காக வளர்த்து வருகிறேன். அதேபோல மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை விற்று வருமானம் பார்த்து வருகிறேன்.

விவசாயத்தைப் பொருத்தவரை கூலிக்கு ஆட்கள் வைத்து வேலை பார்ப்பதைவிட தனது குடும்பத்தில் இருக்கிற ஆட்களை வைத்தே வேலை பார்ப்பது சிறந்தது. இதில் செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும். எனது குடும்பத்தில் அதைத்தான் கடைப்பிடிக்கிறோம். நான் காலையில் எழுந்து வயல் வேலையை கவனிக்க ஆரம்பிப்பேன். எனது மனைவியும், மகள்களும் கால்நடைகளை கவனித்துக்கொள்வார்கள். கோழிகள், மாடுகளுக்கு தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது போன்ற வேலைகளை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். நாங்கள் சொந்தமாக செக்கு வைத்து எண்ணெய் பிழிகிறோம். இதில் கிடைக்கும் புண்ணாக்கை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கிறோம். தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய்களை எண்ணெய் பிழிய பயன்படுத்துகிறோம். அதன் மூலமும் வருமானம் பார்க்கிறோம். இந்தப் பண்ணையில் கிடைக்கும் பொருட்களை பெரும்பாலும் மதிப்புக்கூட்டியே விற்பனை செய்கிறோம். கடந்த 12 வருடங்களாக முழு நேரப்பணியாக விவசாயத்தில் ஈடுபடுகிறேன். இதனால் பல விசயங்களை அறிய முடிந்திருக்கிறது. ஒரு பயிரை விளைவிப்பது முதல் அதனை விற்பனை செய்வது வரையிலான அனைத்துப் பணிகளையும் ஒரு விவசாயி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தில் வெற்றிபெற முடியும்.

விவசாயத்தைப் பொருத்தவரை ஒரே பயிரை சாகுபடி செய்தால் பலன் குறைவாகத்தான் இருக்கும். விவசாயத்தை நான்கு பிரிவாக பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒரு ஏக்கர் நிலம் இருந்தாலும், அதை பிரித்துப் பிரித்து பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். அதாவது தினசரி வருமானம் காண்பதற்கு கோழி, முயல் உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டும். கோழியில் இருந்து தினமும் முட்டை மூலம் வருமானம் பார்க்கலாம். முயலும் அவ்வப்போது விற்பனை ஆகும். வாரா வருமானத்திற்கு மாடுகள் வளர்க்கலாம். மாட்டில் இருந்து பாலை விற்பனை செய்து, வார வாரம் பணத்தை வசூல் செய்துகொள்ளலாம். மாத வருமானத்திற்கு காய்கறி, பூக்கள், நெல், சிறுதானியங்கள் பயிரிடலாம். ஆண்டு வருமானத்திற்கு கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பயிரிடலாம். இப்படி செய்து வருவதன் மூலம் அனைத்து பருவத்திலும் வருமானம் பார்க்கலாம்.

விவசாயத்திற்குத் தேவையான உரங்களைக் கோழி, முயல், மாடுகளின் எச்சம், நிலக்கடலைச் செடி (காய்ந்தது) உள்ளிட்டவற்றின் மூலம் பெற்றுக்கொள்கிறேன். செயற்கை உரங்களை நான் அறவே பயன்படுத்துவதில்லை. இன்றைய காலத்தில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில், நவீன வேளாண் கருவிகளைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் நவீன வேளாண் கருவிகளைக் கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறேன். ஒருங்கிணைந்த பண்ணையை இவ்வாறு திட்டமிடலோடும், தெளிவாகவும் செய்து வந்தால் மற்ற தொழில்களைப் போல ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் எடுக்கலாம்’’ என உறுதிபடக் கூறுகிறார் கமலமுருகன்.
தொடர்புக்கு:
கமலமுருகன்: 90924 08940

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு