கலப்பு திருமணம் செய்த பெண்ணை கொன்று எரித்த குடும்பத்தினர்

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன்(19). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்த இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். வெவ்வேறு சமூகம் என்பதால் இவரது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில், 2 பேரும் கடந்த டிசம்பர் 31ம்தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார், கடந்த 2ம்தேதி ஐஸ்வர்யாவை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தனர். பின்னர், கடந்த 3ம்தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டு, அவரது உடலை எரித்து விட்டதாக நவீனுக்கு அவரது நண்பர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஒரத்தநாடு வந்த நவீன், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நெய்வவிடுதி, பூவாளூர் கிராமத்தில் நேற்று விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் எஸ்பி ஆசிஸ்ராவத் தலைமையிலான போலீசார், ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாதது கண்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை கைது செய்தனர்.

Related posts

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்