குடும்பத்தோடு வெளியே சென்றபோது வங்கி ஊழியர் வீட்டில் 28 சவரன் திருட்டு: பணம், ஏடிஎம் கார்டும் அபேஸ்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் குடும்பத்தோடு வெளியே சென்றபோது வங்கி ஊழியர் வீட்டில் 28 சவரன் நகை தங்க நகைகள், ரொக்கப் பணம், ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த குருச்சந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (34). தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் இவருக்கு தாரகை (26) என்ற மனைவியும், பிரணவி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமையன்று பொழுதுபோக்கிற்காக வெளியே சென்ற போது மகள் பிரணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகாமையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மகளை அழைத்துச் சென்ற ராஜசேகர், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு நேற்று காலை குடும்பத்துடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் களவு போயிருந்தன.

இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகர், இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணம், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர் வீட்டுக்கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?