மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மே மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் 1,37,79,000 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு மீதமும் விரைவில் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாட்டில் விலைவாசியினைக் கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துடன் கூடிய உணவினை உறுதிப்படுத்திடும் நோக்கிலும் முத்தமிழறிஞர் கலைஞர் 2007-ம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் இந்நாள் வரை ரூ.7381.91 கோடி மதிப்பிலான 7,00,396 மெ.டன் பருப்பு மற்றும் ரூ. 7315.96 கோடி மதிப்பிலான 64,62,50,000 பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் நடைமுறையின் காரணமாக மே 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்காக 05.04.2024 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியதில், 17.04.2024 அன்று அனுமதி பெறப்பட்டு அன்றைய தினமே மே 2024-ம் மாதத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு நாளிதழ்களில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. மே 2024 ஆம் மாதத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு 12.05.2024 அன்று பாமாயில் எண்ணெய் மற்றும் 13.05.2024 அன்று துவரம் பருப்பு அதாவது ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டபின் 24 நாட்களிலேயே கொள்முதல் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி மே 2024 ஆம் மாதத்திற்கான பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் 100 விழுக்காடு அனைத்து கிடங்குகளுக்கும் அனுப்பி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜுன் மாதத் தேவையில் 78,44,160 பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பாக்கெட்டுகள் வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. துவரம் பருப்பினைப் பொறுத்தவரையில் மே 2024 ஆம் மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் இன்றுவரை 1,37,79,000 கிலோ வழங்கப்பட்டு மீதமும் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜுன் மாதத் தேவையில் 40,16,000 கிலோ இதுவரை வழங்கப்பட்டு மீதியை வழங்கும் பணி விரைவு படுத்தப்பட்டு வருகிறது.

ஜுன் 2024 ஆம் மாதத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்காக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வேண்டி 07.05.2024 அன்று அனுப்பப்பட்டு 27.05.2024 அன்று அனுமதி பெறப்பட்டு 28.05.2024 அன்றைய நாளிதழ்களில் அறிவிக்கை செய்யப்பட்டு 08.06.2024 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பின் 11.06.2024 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி 13.06.2024 அன்று 13,000 மெ.டன் பருப்பு மற்றும் 1,10,00,000 பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டு கிடங்குகளுக்கு அனுப்பி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே 2024 ஆம் மாதத்திற்குரிய பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜுன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், ஜுன் மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பொது விநியோகம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்கு உறுதுணையாக விவசாயிகளின் நலன் காக்க நெல்லுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கியது, நெல் மணிகளை வீணாக்காமல் சேமிக்க மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் அமைத்தது. தரமான அரிசியினைத் தொடர்ந்து விநியோகித்திட அரவை ஆலைகளில் கலர் சார்ட்டர் பொருத்தியது. வட்ட அளவில் அதிக எண்ணிக்கையில் செயல்முறைக் கிடங்குகள் கட்டிட நடவடிக்கை எடுத்தது போன்ற செயல்களால் அனைவரது பாராட்டையும் பெற்று பொது விநியோகத் திட்டம் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு முன்னணி வகிக்கிறது.

2023-2024 ஆம் நிதியாண்டில் ரூ.10,500 கோடி நிதியை மானியமாக வழங்கி, இத்திட்டத்தினை மேலும் முனைப்புடன் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த அதிமுக ஆட்சியிலும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படாமலிருந்த நிலை இருந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளினால் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களைத் திரித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் முறையானதல்ல என்பதோடு மே மற்றும் ஜுன் 2024 மாதங்களின் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீடு முழுமையாக நகர்வு செய்யப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு