பொய்யான செய்திகளை வெளியிடுவதாக கூறி சார் பதிவாளர்களை மிரட்டி பணம் பறித்த வராகி மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சார்பதிவாளர் சங்கம் பரபரப்பு புகார்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் மாநில தலைவர் மகேஷ், பொதுச்செயலாளர் மணிராஜ் உட்பட 25க்கும் மேற்பட்ட பதிவாளர்கள் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து சார் பதிவகங்களிலும் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கோ, சார்பதிவாளருக்கோ, மேல் அதிகாரிகளுக்கோ எந்தவித நேரடி தொடர்பும், சம்பந்தமும் இல்லாத நபர்கள் தங்களை பத்திரிகையாளர்கள் என்று போலி அடையாள் அட்டையை காண்பித்து வருகின்றனர். பொதுமக்கள் இல்லாத சமயம் சார்பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவது வாடிக்கையாகி விட்டது.

பணம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் சார் பதிவாளர்களை அவர்கள் வீடு செல்லும் வரை தொடர்ந்து வருவதும், குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காட்டி மிரட்டுவதும், பொய் வழக்கு கொடுக்க போவதாகவும், பொய்யான செய்திகளை வெளியிடப்போவதாகவும், வலைத்தளங்களில் இயங்கும் தன் சகாக்களை கொண்டு அவதூறு பரப்ப இருப்பதாகவும், மிரட்டி பணம் பெற வேண்டும் என்ற நோக்கில் மாதந்தோறும் வந்து தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என்று பதிவுத்துறை பணியாளர்கள் எங்களது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அண்மையில் வராகி (எ) கிருஷ்ணகுமார் என்பவர் பத்திரிகையாளர் என்கிற போர்வையில் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் வைத்திலிங்கம் என்பவரை மிரட்டி ₹50 லட்சம் கேட்டதால் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்படி நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவ்வாறு அவதூறு பரப்பி மிரட்டி பணம் பெறும் கலாச்சாரம் பத்திரப்பதிவுத்துறையில் மிக வேகமாகவும், மிக மோசமாகவும் பரவி வருகிறது.

இதனால் பதிவுத்துறை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தன்னுடைய அரசு பணியை செய்ய முடியாமல், இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட மிரட்டல்களால் சிலர் தற்கொலை செய்திருப்பதும் எந்த தவறும் செய்யாமல் பல வழக்குகளை ஆண்டாண்டாக நடத்தியும் வருகிறார்கள். அதோடு பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், சார் பதிவாளர்கள் இப்படிப்பட்ட அவதூறுகளையும் மிரட்டல்களையும் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ சந்திக்கநேரும் போது, மாநகர எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலர்கள் புகார்களை உடனடியாக பதிவு செய்ய ஒரு புகார் தொலைபேசி எண் கொடுத்து அதன் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட ஆவனசெய்யுமாறும், தங்களை பணிவுடன் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு