போலி ஆவணத்தில் ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு அதிமுக மாஜி எம்எல்ஏவின் கணவர் அதிரடி கைது: மேலும் 7 பேருக்கு வலை

நாமக்கல்: ரூ.50 கோடி நிலத்தை அபகரித்த புகாரின்பேரில், அதிமுக மாஜி எம்எல்ஏவின் கணவரை கைது செய்த போலீசார், மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.

இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), கடந்த 2 ஆண்டுக்கு முன்பு போலி ஆவணம் தயாரித்து, தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த நிலத்தை பிளாட்டுகளாக பிரித்து, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். பிளாட்டுகளுக்கு சிலுவம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற விண்ணப்பித்த போது, இந்த முறைகேட்டை எட்டிக்கண் கண்டுபிடித்தார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கடந்த இரு வாரத்துக்கு முன்பு புகாரளித்தார். இதன்பேரில், டிஎஸ்பி வின்சென்ட் வழக்குபதிந்து விசாரித்தார். இதில், எட்டிக்கண் வசம் இருந்த நிலத்தின் ஒரிஜினல் பத்திரங்களை ஆய்வு செய்தபோது, நிலம் அவரது பெயரில் இருப்பதும், போலி ஆவணங்கள் தயார் செய்து, மாஜி அதிமுக எம்எல்ஏவின் கணவர் பொன்னுசாமி மற்றும் 7 பேர் நிலத்தை அபகரித்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் பொன்னுசாமி உளபட 7 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த பொன்னுசாமியை நேற்று முன்தினம் இரவோடு இரவாக கைது செய்தனர். அவரை நேற்று காலை நாமக்கல் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது