போலி ஆதார், பான்கார்டு தயாரிப்பு கர்நாடக அமைச்சருக்கு தொடர்பு?

பெங்களூரு: பெங்களூருவில் வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை போலியாக தயார் செய்து அதிக விலைக்கு விற்று வந்த மவுனேஷ் குமார், பகத், ராகவேந்திரா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் மவுனேஷ் என்பவர் அமைச்சர் பைரதி சுரேஷுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வைரலாகின. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த அமைச்சர் பைரதி சுரேஷ், ‘தினமும் காலை எழுந்ததிலிருந்து 400-500 பேர் என்னை சந்திக்கின்றனர்.

அதில் பலர் என்னுடன் போட்டோவும் எடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்களா? அவர்களுடன் எனக்கு ஏதேனும் டீலிங்கோ அல்லது பரிவர்த்தனையோ இருந்தால் கூட, அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறலாம். அது எதுவுமே இல்லாதபோது வெறும் போட்டோவை மட்டும் வைத்து கூறக்கூடாது. என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்ட யாராவது தவறு செய்தாலோ, குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ, அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? இது உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்’ என்றார்.

* போலீஸ் வெளியிட்டது ஏன்?
மவுனேஷுடன் அவர் இருக்கும் போட்டோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பைரதி சுரேஷ், ‘அதுபற்றி எனக்கு தெரியாது. அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. யார் வேண்டுமானாலும் எத்தனை போட்டோ வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும். மாநில காவல் துறை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஆகியோர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்கள்.

தவறு செய்தவர்களை அவர்கள் தூக்கிலிடட்டும். கர்நாடக மக்கள் 7 கோடி பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். எனக்கு தெரிந்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதற்காக, அவர்கள் தவறு செய்தால் அதற்கு பொறுப்பேற்க முடியுமா? விசாரணை நடந்து முடியட்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று பைரதி சுரேஷ் கூறினார்.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு