Saturday, October 5, 2024
Home » போலி அரசியலை வீழ்த்தி, மாநில உரிமையை உயர்த்திப் பிடிக்க அயராது உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

போலி அரசியலை வீழ்த்தி, மாநில உரிமையை உயர்த்திப் பிடிக்க அயராது உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: சேலத்தில் நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்குகிற நிகழ்வு ஆகியவற்றில் கடந்த வாரம் பங்கேற்றோம். செல்லும் இடமெல்லாம் கழக இளைஞர்களின் உற்சாகம் – மூத்த முன்னோடிகளின் வாழ்த்து ஆகியவை `இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும் `ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும் 2024-மக்களவைத் தேர்தலில் வீழ போவதை உறுதி செய்தன என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில்:
சிறிய விதை போல மனதில் தோன்றிய ஓர் எண்ணம், இந்தக் கழகத்தின் பலத்தினால் படிப்படியாக வளர்ந்து ஆலமரமாகக் கிளைவிடுவதைக் கண்முன் கண்டு வியக்கிறேன். சமீபத்தில், நான் சென்றுவந்த தேனி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுப்பயணமே அதற்கான சான்று.

கடந்த ஆண்டு, மே மாதம் கழக நிகழ்ச்சிகளுக்காக என்னிடம் தேதி கேட்டு வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் தளி பிரகாஷிடம்‘கழக முன்னோடிகளின் உழைப்பைப் போற்றும் வகையில், பொற்கிழி வழங்கலாம்’ என்ற என் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டேன். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் 500 கழக முன்னோடிகளுக்குத் தலா ரூ.5,000 பொற்கிழிகளை வழங்கினார்.

அந்த மேடையில் முன்னோடிகள் பலர் அண்ணா, கலைஞர் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகளை, அவர்கள் எழுதிய கடிதங்களை எடுத்து வந்து காண்பித்தனர். பெரியாரை, அண்ணாவை சந்தித்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டனர். தங்களின் அனுபவங்களை, உழைப்பை என்னிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பு, அனைவரிடமும் இருந்ததை உணர்ந்தேன்.

முன்னோடிகளின் பங்களிப்பை, உழைப்பை, அனுபவத்தை கவுரவிக்கும் வகையிலும் அவற்றை இளைஞர் அணியினருக்குக் கடத்தும் வகையிலும், இந்தப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்த மாவட்ட செயலாளர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அன்றே முடிவுசெய்தோம். அதைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி கழக முன்னோடிகள் 200 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை பொற்கிழியாக என் கைகளால் வழங்கவைத்து அவர்களை கவுரவித்தார் மாவட்டக் கழகச் செயலாளர் சிற்றரசு. ‘பொற்கிழியாக 10 ஆயிரம் வழங்குவதுதான் சரியாக இருக்கும்’ என அன்று முடிவானது.

அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ‘கழக முன்னோடிகள் மாநாடு’ என்று சொல்லும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இப்படி இதுவரை மொத்தமுள்ள 72 மாவட்டக் கழகங்களில் 46 கழக மாவட்டங்களின் சார்பில் 44 கோடியே 73 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கழக முன்னோடிகளுக்கு என் கைகளால் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளது.

கழகப் பணி அனுபவங்களின் மொத்த வடிவமாக அமர்ந்திருக்கும் முன்னோடிகள் ஒவ்வொருவரையும் பெரியார்- அண்ணா-கலைஞர்- பேராசிரியர் ஆகியோரின் மறு உருவமாகவே பார்க்கிறேன். இந்தப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளை ஒரு பேரன் தாத்தா பாட்டிகளுக்குச் செய்யும் கடமையாகவே கருதுகிறேன்.

முதலமைச்சர் சமீபத்தில், கொளத்தூர் தொகுதியில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிப் பேசும்போது, “இளைஞர் அணி செயலாளர் தம்பி உதயநிதி தன்னிடம் நிகழ்ச்சிகளுக்குத் தேதி கேட்கும் மாவட்ட செயலாளர்களிடம், ‘கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினால் தேதி தருகிறேன்’ என்று சொல்லி அதை உறுதிப்படுத்திவிட்டுத்தான் அந்த மாவட்டத்துக்குச் செல்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன். மகன் என்பதற்காக அல்ல. கட்சி முன்னோடிகளுக்கு உரிய மரியாதையைத் தரும் உதயநிதியை கழகத் தலைவராகப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாராட்டு அனைத்தும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைச்சர்கள் – மாவட்டக் கழகச் செயலாளர்களையே சேரும். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வருவாய் மாவட்டவாரியாக நடைபெற்றுவரும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமும் ஒரு சிறுபுள்ளியில் இருந்து தொடங்கியதுதான். சேலத்தில் வரும் டிசம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டுக்கு இளைஞர்களை மனரீதியாகத் தயார்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் சென்று அவர்களைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான் இந்தச் செயல்வீரர்கள் கூட்டம்.

முதல் கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் சுந்தர் தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டம் முன்மாதிரியாக அமைந்தது என்றால், அது மிகையல்ல. அந்த வரிசையில் இந்தச் சுற்றுப்பயணத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரியில் நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் மிகத் தேர்ந்த திட்டமிடலுடன் பிசிறின்றித் தெளிவாக நடைபெற்று முடிந்துள்ளன.

ஒவ்வொரு செயல்வீரர்கள் கூட்டத்திலும் அதிகபட்சம் அரை மணிநேரம் உரையாற்றுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும், மனிதகுலத்துக்கே எதிரியாக உள்ள பா.ஜ.க.வையும், அதற்கு உடந்தையாக இருந்து தமிழர்களின் நலன்களை விட்டுக்கொடுத்த அடிமை அ.தி.மு.க.-வையும் சம்பவங்களை உதாரணமாகச் சொல்லி விமர்சித்துப் பேசுகிறேன். நான் பேசும் விஷயங்களை இளைஞர்கள் வரவேற்று உள்வாங்கிக் கொள்கின்றனர்.

“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி-மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்’ என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது.

தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும். அந்தக் கொள்கைப் பயணத்தில் இளைஞர்களைக் கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்து, அவர்களைத் தலைவர்களாக உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தி, அவர்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி… என அது ஒரு நீண்ட நெடிய பயணம். அதைத்தான் பெரியார்-அண்ணா-கலைஞர் போன்றோரெல்லாம் பின்பற்றிச் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து, தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் தலைவர் அவர்கள் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார்.

ஆனால், `இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்றுவிடவேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல்பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள்தான்.

இந்த நாடகத்தில், ‘தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுத்தவர்கள்’, `நீட் தேர்வை நுழையவிட்டு, 20-க்கும் மேற்பட்டோரின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்’, ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறப்புக்கு காரணமானவர்கள்’, மக்களின் வரிப் பணத்தில் பல லட்சம் கோடி ரூபாயைச் சுருட்டியவர்கள்’ என்ற அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையைக் கழுவிவிடப் பா.ஜ.க. நினைக்கிறது. ‘பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே’ என்று எடப்பாடியும் கைகளைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குகள் போன்ற முக்கியமான பல வழக்குகளைச் சி.பி.ஐ கிடப்பில் போட்டிருப்பது போன்றவை எல்லாம் அதைத்தான் உணர்த்துகின்றன.

`கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்’, தூண்டிவிடப்பட்ட `மணிப்பூர் கலவரம்’, `சி.ஏ.ஜி.’ வெளியிட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என ஏற்கெனவே இரத்தக் கறையும் ஊழல் கறையும் படிந்தவர்களால், எடப்பாடி மீதுள்ள அதே கறைகளை எப்படிக் கழுவிவிட முடியும்?

பாசிச பா.ஜ.க.-வுக்கு அடிமையாக இருந்து மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்ததற்கான தண்டனையை, மக்கள் எடப்பாடி அண்ட் கோ-வுக்கு வழங்குவார்கள் என்பது நிச்சயம். எடப்பாடியின் தொடர் தோல்வியும் அதைத்தான் உணர்த்துகின்றன.”

மக்கள் விரோத அடிமை அ.தி.மு.க. – பாசிச பா.ஜ.க. குறித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இப்படிப் பேசும்போது அவர்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்குவதை உணரமுடிகிறது.

நவீன தமிழ்நாட்டின் சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும், மக்களுக்குப் பயனுள்ள வகையில் எப்படியெல்லாம் கொண்டாடுகிறோம் என்பதை, ஒவ்வொரு மேடையிலும் பட்டியலிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

‘முடியவே முடியாது’ என்றார்கள். ஆனால், கலைஞர் பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸைக் கட்ட அவர்களுக்கு மனமில்லை. ஆனால், கலைஞர் பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகத்தையும், சென்னையில் மருத்துவமனையையும் நம் முதலமைச்சர் அவர்கள் கட்டியெழுப்பித் திறந்து வைத்துள்ளார்” என்பதைக் குறிப்பிடும்போது மக்கள் நல அரசுக்கும் – மக்கள் விரோத கும்பலுக்குமான வித்தியாசத்தை இளைஞர்கள் நன்றாகப் புரிந்துகொள்கின்றனர்.

ஒரு கட்சி ஆளுங்கட்சியாகும்போது, கட்சியைக் கைவிட்டு விடுவார்கள். அதன் பணிகள் தொய்வடையும் என்று கூறுவார்கள். ஆனால், நம் கழகத் தலைவர் அவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பது போன்ற மனநிலையுடன் எப்படி கட்சிப் பணியாற்றுகிறார் என்பதை ஒவ்வொரு மேடையிலும் பட்டியலிடுகிறேன்.

“ஒரு பக்கம் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என மண்டல வாரியாக அரசு ஆய்வுக் கூட்டங்கள், மறுபக்கம் கழகத் தலைவராக மண்டல வாரியாக, `பாக முகவர்கள் மாநாடு’ நடத்துகிறார். முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாட அரசின் சார்பில், 13 குழுக்கள் அமைத்துள்ளார். அதேபோல கழகத்தின் ஒவ்வோர் அணிக்கும் சில பணிகளை ஒதுக்கித் தந்து கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடி வருகிறார். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சட்டமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்திச் செல்கிறார். மறுபுறம் ‘இந்தியா கூட்டணி’ அமைத்து, நாடாளுமன்றத் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார்.

இப்படி முதலமைச்சர் – கழகத் தலைவர் என இரு பொறுப்புகளிலும் தன்னுடைய உழைப்பால் தொய்வில்லாமல் தொடர்கிறார். மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியும் தொடர் தேர்தல் வெற்றியும் அதைத்தான் உணர்த்துகின்றன” என்று பேசும்போது நம் கழகத் தலைவரின் உழைப்பை நம் இளைஞர்கள் தெளிவாகப் புரிந்துகொள்கின்றனர்.

“சமூக வலைத்தளத்திலேயே கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம். காணொலிக் காட்சி வாயிலாக உரையாடிக்கொள்கிறோம். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் மாநாடு நடத்தி, லட்சக்கணக்கான இளைஞர்களை ஒரே இடத்தில் கூட்டவேண்டியதன் அவசியம் என்ன?” என்ற கேள்வியையும் ஒவ்வொரு கூட்டத்திலும் நானே எழுப்பிப் பதிலளிக்கிறேன்.

“தலைமைக் கழகம் தொடங்கி, கடைக்கோடி கிளைக்கழகம் வரை, நம் இயக்கம் மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டது. மேலும் 23 அணிகள், ஒவ்வொன்றுக்கும் ஒன்றிய- நகர-பகுதி- பேரூர் வரை நிர்வாகிகள் இருக்கிறார்கள். இளைஞர் அணி கிளைக்கழகம் வரை நிர்வாகிகளைக் கொண்டது. இந்தக் கட்டமைப்பினால்தான் பல இடர்களுக்கு இடையிலும் கழகம் தொய்வின்றி, தன் வெற்றிநடையைத் தொடர்கிறது.

இப்படிப் பலம் வாய்ந்த கட்டமைப்பை, இந்தச் சங்கிலித் தொடரை நம் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், உங்களின் தேவைகளை நிறைவேற்றவும், உங்களின் கோரிக்கைகளுக்குச் செவிகொடுக்கவும் கழகம் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும்தான் இந்த மாநாடு.

தவிர, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் மாநாடு. கழகத்தின் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தவும், நீண்ட பாரம்பரியம் கொண்ட, முதிர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கழகம் நமக்குத் துணையாக இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் கழகத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சேலத்தில் கூட வேண்டியது அவசியம்” என்று உரையாற்றுகிறேன்.

“சமீபத்தில், மதுரையில் நடைபெற்று முடிந்த ஒரு கட்சியின், மாநாட்டில் அதன் கொள்கைகள் குறித்துப் பேசப்பட்டதா, அந்தக் கட்சியின் ஆட்சியின் சாதனைகளாக எதுவும் விவாதிக்கப்பட்டதா? அந்த `புளி சாத மாநாடு’ போல் இல்லாமல் நம் இளைஞர் அணி மாநாடு நம் கொள்கைகளைப் பேசக்கூடியதாக, நம் தலைவர்களின், கழக அரசின் சாதனைகளைப் பட்டியலிடும் வகையில், நம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து நம் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும்” என்ற உறுதியையும் அவர்களுக்கு அளிக்கிறேன்.

அதேபோல நம் கழகம் முன்னெடுத்துள்ள, ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கம் குறித்தும், நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில், 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் மறக்காமல் குறிப்பிடுகிறேன். மேலும், அந்தச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இளைஞர்கள் அனைவரும் ‘நீட் விலக்கு’-க்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட இணையதளத்துக்குச் சென்று கையெழுத்திடுகின்றனர்.

இதுவரை 20 வருவாய் மாவட்டங்களில் இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மீதியுள்ள 18 வருவாய் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை டிசம்பர் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு ‘கலைஞர் நூலகம்’ அமைக்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் இளைஞர் அணியை அறிவுறுத்தி உள்ளார்கள். அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் முதல் ‘கலைஞர் நூலக’த்தைத் தொடங்கி வைத்தோம். இந்தச் சுற்றுப்பயணத்தில் கம்பம், பெரியகுளம், நாங்குனேரி, பாளையங்கோட்டை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி ஆகிய 6 தொகுதிகளுக்கான ‘கலைஞர் நூலக’-ங்களைத் தொடங்கி வைத்துள்ளோம். இதுவரை 15 தொகுதிகளில், கலைஞர் நூலகங்கள் தொடங்கப்பட்டு, மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இப்படி, இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம், கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது, கலைஞர் நூலகங்கள் திறப்பு, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம்… என இந்தச் சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததைவிட, மிகச்சிறப்பாக அமைந்திருந்தது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

இந்த 4 மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்த அமைச்சர்கள் அண்ணன் ஐ.பெரியசாமி, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அண்ணன் தங்கம் தென்னரசு, அண்ணன் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் அண்ணன் ஆவுடையப்பன், அண்ணன் கம்பம் ராமகிருஷ்ணன், அண்ணன் டி.பி.எம்.மைதீன்கான், அண்ணன் மகேஷ், அண்ணன் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நெல்லையில் அரசு நிகழ்ச்சிகளில் எங்களுடன் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் அப்பாவுக்கும் நன்றி.

இந்த மாவட்டங்களில் இளைஞர் அணி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் துணைச் செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி.ராஜா ஆகியோருக்கும் நன்றி. அரசு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி.

கழக நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள். நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து அளிப்பது, பொன்னாடை – மாலை அணிவிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போன்ற தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிருங்கள். கழக வேட்டி – துண்டு மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக அளியுங்கள். அவை தேவையானோருக்கு பயன்படும். விரும்புவோர் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை; இளைஞர் அணி வளர்ச்சி நிதியாக அளியுங்கள். என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi