நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம்: சேலம் மாவட்டத்தில் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதல் முதலாக சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோக திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அரிசி திருட்டு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையா பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சுத்தத்தை உறுதி செய்யும் வகையிலும், கடைகளில் அரிசி அளவு குறைவதை தடுக்கும் வகையிலும் இனி பாக்கெட்டில் விற்கும் முறை அமலுக்கு வருகிறது. இவை படிப்படியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்