Monday, July 1, 2024
Home » ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதா? உயர்கல்வி கட்டமைப்பை சிதைக்கும் ஆளுநர்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதா? உயர்கல்வி கட்டமைப்பை சிதைக்கும் ஆளுநர்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

by Ranjith

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, கடந்த 2021 ஜூலை 1ம்தேதி, ஜெகநாதன் பொறுப்பேற்றார். ஆர்எஸ்எஸ் மற்றும் அதிமுக பின்புலத்தில் இருந்து, இந்த பதவியை அவர் பெற்றதாக, ஆரம்பத்திலேயே சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, தனது பாஜ-ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு, பணியாளர் விரோத போக்கு, பணிநீக்கம், பணி இடைநீக்கம், கேள்வி கேட்பவர்கள் மீது மொட்டை பெட்டிஷன் போட்டு விசாரணைக்குழு அமைத்து மிரட்டுதல், மெமோக்கள் தருதல், தான் சார்ந்த சமூகத்தினருக்கு மட்டும் முன்னுரிமை, அரசுடன் ஒத்துழைக்க மறுத்தல் என எதேச்சதிகார போக்குடன் செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு அரசு மற்றும் ஆட்சிக்குழுவின் அனுமதி பெறாமல், பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனம் ஒன்றை, மாஜி பதிவாளர் தங்கவேலுவுடன் இணைந்து தொடங்கினார். இதுதொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்க ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில், துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான துணைவேந்தர் ஜெகநாதனின் 3 ஆண்டு பதவிக்காலம், நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு மே 19ம் தேதி வரை, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான துணைவேந்தருக்கு, ஆளுநர் பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கல்வியாளர்கள் கூறியதாவது: ஊழல், முறைகேடு, மோசடி, அரசு சொத்தை துஷ்பிரயோகம் செய்தல், லாப நோக்கத்துடன் அரசை ஏமாற்றுதல், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட, பிணையில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளில் பதியப்பட்ட குற்றவழக்கில் எப்ஐஆர் பதிவு, உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் நிலுவை,

தமிழ்நாடு அரசு அமைத்த அரசு செயலர் நிலையிலான உயர்மட்டக்குழு விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபணம், அரசின் உள்ளாட்சி சிறப்பு தணிக்கையில் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான குற்றப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மாண்பு, மரியாதை, உயர் பண்பு, அறப்பண்புகள் ஒருங்கே பெற்று, லட்சக்கணக்கான மாணவர்களுக்கான முன் மாதிரியாகத் திகழ வேண்டிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருக்கும் ஒருவர் மீது, இத்தனை குற்றச்சாட்டுகள் இருப்பது வரலாற்றில் முதன்முறையாக இருக்கும்.

பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு, டெண்டர் விதிகளை மீறி பல்கலைக்கழகத்திற்கான மென்பொருட்கள், கணினிகளை முறைகேடாக கொள்முதல் செய்ததில் நிதி இழப்பு, பட்டியலின மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கென ஒன்றிய, மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட ரூ.2.5 கோடி நிதியில் போலி பில்கள், போலி ஆவணங்கள் மூலம் ஊழல் செய்தது, பல்கலைக்கழக பணிகளை அவுட்சோர்சிங் முறையில் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொண்டு முறைகேடுகள் செய்தது என துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் அடுக்கடுக்காக தமிழ்நாடு அரசுக்கு குவிந்தன.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி தலைமையிலான குழுவினர், துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் மாஜி பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதாக, விரிவான அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பித்தனர். ஆனால், அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல், பூட்டர் பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையத்தில் மோசடி, ஏமாற்றுதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்துதல், வன்கொடுமை என ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தள்ளுபடி செய்ய வேண்டி உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், பூட்டர் பவுண்டேசன் தொடங்கியதில் ஏற்பட்ட விதிமீறல்கள், குறைபாடுகளை ஆராய, தமிழ்நாடு அரசு சிறப்பு இணை ஆணையர் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட சிறப்புத் தணிக்கைக்குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்ததில், அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி, 8 தனியார் நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தம் மேற்கொண்டது,

பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர், தங்களது தனிப்பட்ட பெயர்களில் தங்களின் ஆதார், பான் கார்டுகள், வீட்டு முகவரிகளை பயன்படுத்தி அரசு நிறுவனத்தில் தனியார் நிறுவனம் தொடங்கியது, அரசு மற்றும் ஆட்சிக்குழுவின் எவ்வித ஒப்புதலுமின்றி இந்நிறுவனத்தைத் தொடங்கியது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், மாணவர்களிடம் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது ஆகியவவை சிறப்பு தணிக்கைக்குழு ஆய்வில் தெரியவந்தது.

இவை அனைத்தும், அரசு கடிதத்தின் மூலம் ஆளுநரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. 2 மாதங்களுக்கும் மேலாக, அந்த அறிக்கைகளின் மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவுக்கு, அரசு சார்பிலான அமைப்பாளர் மற்றும் ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை சார்பிலான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒருமாதம் ஆனது.

முறைப்படி புதிய துணைவேந்தர் தேர்வுக்குழுவுக்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பதனாலேயே, ஆளுநர் அரசு அறிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இப்படி தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், ஊழல், முறைகேட்டில் சிக்கும் தனது ஆதரவாளர்களை காக்கும் கரமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

ஆளுநரின் இந்த மவுனப்புரட்சி என்பது, தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைப்பின் மீதான தாக்குதல் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் உள்ள தமிழகத்தின் உயர்கல்வி கட்டமைப்பை, சிதைக்கும் நோக்கில் ஆளுநர் செயல்பட்டு வருவது அப்பட்டமாக தெரியவருகிறது. இந்திய அளவில் உயர்கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கையில், தமிழகம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கு தமிழக அரசின் மாணவர்கள் மீதான அக்கறையும், செயல்திட்டங்களும் தான் காரணமாக உள்ளது.

குறிப்பாக, அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்கு போகும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்விக்கு வழிகாட்டுவதுடன், வேலைவாய்ப்புகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நான் முதல்வன் திட்டம் என பார் போற்றும் பல திட்டங்களை தமிழக அரசு தீட்டி வருகிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வி கல்விக்கட்டமைப்பை உலகத்தரத்தில் மாற்றி வரும் மாநில அரசுக்கு, சவால் விடும் போக்கில் செயல்பட்டு வரும் துணைவேந்தர் மற்றும் அவருக்கு வழிகாட்டியாக இருந்து வரும் ஆளுநரின் கூட்டு நடவடிக்கைகள், சட்டப்படி விரைவில் முறியடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* பல்கலைக்கழகம் முன் இன்று முழக்க போராட்டம்
துணைவேந்தரின் பதவி நீட்டிப்பை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. அதன் பின்னர், தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, ஆளுநர் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த பதவி நீட்டிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி முதற்கட்டமாக இன்று(1ம் தேதி) மாலை பல்கலைக்கழகம் முன்பு வாயிற்முழக்க போராட்டம் நடக்கிறது. அதன் பின்னர், அடுத்தடுத்து பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறோம். அதே சமயம், சட்டப்பூர்வமாகவும் இதனை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறோம்,’’ என்றார்.

* சமய, சமூக ஆதிக்க நிலையால் பாரபட்சம்
துணைவேந்தர் ஜெகநாதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, அவரின் சமய, சமூக ஆதிக்க நிலைப்பாட்டால் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தனது இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டால், ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ரகசிய கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, தனது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுதல், ஆளுநரின் செயல் திட்டங்களை முனைந்து செயல்படுத்துதல்,

தனது சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் உயர் பதவிகள் வழங்குதல், 5க்கும் மேற்பட்ட பணிநீக்கம், 20க்கும் மேற்பட்ட பணியிட மாற்றம், பலரும் சஸ்பெண்ட் என தனக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை கண்மூடித்தனமாக வேட்டையாடி வருகிறார். அதே சமயம், குற்றச்சாட்டுகள் நிரூபணமான தனது ஆதரவாளர் மற்றும் உறவினரான மாஜி பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய, அரசு அறிவுறுத்திய நிலையிலும், அவரைப் பணி ஓய்வு பெற அனுமதித்து, தனது சமுதாய பாசத்தை வெளிப்படுத்தினார்.

அதே போல், தமிழ்த் துறைத் தலைவர் பெரியசாமி பதிப்புத் துறையில் ஊழல் செய்தார் என சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து, வழக்குத் தொடர அனுமதி கோரிய போது, அடாவடியாக அனுமதி மறுத்து தனது இனப் பாசத்தை வெளிக்காட்டினார்.

* முறைப்படி புதிய துணைவேந்தர் தேர்வுக்குழுவுக்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பதனாலேயே, ஆளுநர் அரசு அறிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இப்படி தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், ஊழல், முறைகேட்டில் சிக்கும் தனது ஆதரவாளர்களை காக்கும் கரமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

* கேள்விக்குறியாகும் பல்கலை நிதி ஆதாரம்
துணைவேந்தர் ஜெகநாதனின் கடந்த 3 ஆண்டு பதவிக் காலத்தில், பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித மேம்பாடும் அடையவில்லை. ஏற்கனவே முந்தைய துணைவேந்தரும், பேராசிரியர்களும் உழைத்து உருவாக்கிய ஆவணங்கள், தரவுகள், சாதனைகளை, தான் பதவியேற்ற ஒருமாதத்தில் சமர்ப்பித்து ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து பெற்றது மட்டும்தான் இவரது சாதனை. அதே சமயம், தரவரிசையில் இதே ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து பெற்ற, பிற பல்கலைக்கழகங்கள் எல்லாம், ஒன்றிய அரசு நிறுவனங்களிடம் ரூ.100 கோடி அளவுக்கு நிதி பெற்றுள்ளது.

ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதுபோன்ற நிதி எதுவும் பெறப்படவில்லை. இதேபோல், மாநில அரசுக்கு எவ்வித கணக்கும் சரிவர காட்டாத காரணத்தால், பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய பெருமளவு நிதி வராமல் உள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனின் தனிமனித ஈகோ காரணமாக, பல்கலைக்கழக நிதி ஆதாரம் வேகமாக கரைந்து வருகிறது. இதுவரை பல்கலைக் கழகத்தின் டெபாசிட்டுகள் ஏராளமாக உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, இணைவு பெற்ற கல்லூரிகளுடனும் இணக்கமான உறவு இல்லாமல், அவர்களிடமும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்று வருகிறார். இதனால், சேலம் உள்பட 4 மாவட்ட உயர்கல்வியில், அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. ஒரு தனி மனிதனின் ஈகோவும், அதிகார அத்துமீறலும் பல்கலைக்கழகத்தை பாழாக்கி வருகிறது. இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய ஆளுநர், அமைதியாக துணைவேந்தரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்பது, அவலத்தின் உச்சம் என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

* ‘வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்குவதுதான் நிரந்தர தீர்வு’
பாஜ ஆளாத மாநிலங்களில் ஆளுநராக உள்ளவர்கள், அங்கு மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை தூக்கி பிடிக்கும் வகையில் உயர்கல்வியில் திணிக்க முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் துணைவேந்தர்கள், பேராசிரியர் நியமனம் செய்யும் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு துணைவேந்தர் பதவி மற்றும் பணி நீட்டிப்பு போன்ற முடிவுகளை எடுத்து ஆணைகளை வழங்கி வருகின்றனர். இதை கண்டித்து வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கி, மாநில முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அந்த மசோதா ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதேபோல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளன. ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. ‘அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர். அமைச்சரவை நிறைவேற்றும் மசோதாக்களில் கையெழுத்திடுவதுதான் ஆளுநர் வேலை. ஒருவேளை திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதை சொல்லி மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும்.

ஒப்புதல் தரவில்லை என்றால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். மசோதாவை கிடப்பில் போடக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஏனோ நியமன பதவியில் அமர்ந்த ஆளுநர்கள், தங்களை மக்களின் எஜமானர்கள் என நினைத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். உயர்கல்வியை சிதைக்கும் ஆளுநரின் செயலுக்கு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

You may also like

Leave a Comment

seven + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi