தனித்திறனைத் தனித்துவமாக வெளிப்படுத்துங்கள்!

வெற்றிக்கு நிறைய உறவு முறைகள், ஆனால் தோல்வியோ கண்டுகொள்ள ஆளில்லாத ஒரு அனாதை என்பார்கள். வெற்றியைக் கொண்டாடும் உலகம் தோல்வியைக் கொண்டாடுவதில்லை. ஆனால் தோல்விப் பாதையை கடக்காமல் வெற்றியை எட்டமுடியாது என்பதை வெற்றியாளர் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தோல்விப் படிகளின் மீதேறித்தான் வெற்றி உப்பரிகையை அடைய முடியும் என்பதை வெற்றியாளர் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் தோல்விகளின்போது அவர்கள் மனம் சோர்வு அடைவதில்லை. நிமிர்ந்தெழுகிறார்கள். அதை உணராதவர்கள் முதல் தோல்வியிலேயே முதுகு முறிந்து மூர்ச்சையாகி விடுகிறார்கள். தோல்விகளையும், துயரங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு வீறு கொண்டு எழும்புபவர்களைத்தான் உலகம் வியக்கிறது, மதிக்கிறது. தோல்வி பல காரணங்களால் வரலாம். முயலாமை, உழையாமை இவற்றால் விளையும் தோல்விகள்தான் நிரந்தரமானவை. உடல் குறைபாடோ, பொருளாதாரப் பின்னடைவோ ஏற்படுத்தும் தோல்விகள் தற்காலிகமானவை தான். பேச்சுக் குறைபாடு, அழகற்ற முகம் இவற்றைக் காரணம் காட்டி நடிப்புத் துறையால் நிராகரிக்கப்பட்ட ஒருவர்,உலகளவில் புகழ்பெற்ற நடிகராய் வெற்றிக் கொடி நாட்டிய சரித்திரத்தைப் பார்ப்போம்.

சும்மாவே பொம்மை மாதிரி இருந்து கொண்டு வாழ்ந்தால், நமது சிந்தனைகளும், எண்ணங்களும் அவை உயர்வானதாக இருந்தால் கூட சமூகத்தின் பாராட்டுதலுக்கு அகப்படாமல் போய்விடும்.ஆகவே, உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வேடமேற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கதாபாத்திரத்தை நீங்களே எதுவெனத் தேர்ந்தெடுங்கள். அதற்கேற்றாற்போல் உங்கள் நடை, உடை,பாவனைகளை மற்றவர்களுக்குக் காண்பியுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு இது மிகவும் அவசியமாகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த நடிகர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.அப்பா விவசாயி. நடிகருக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்தது. அங்கு படிக்கும்போது அவருக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு காமெடி நாடகக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், அவரது பேச்சுக் குறைபாட்டால் சிறப்பாக அவரால் நடிக்க முடியவில்லை. என்றாலும் அவரது நடிப்பு ஆர்வம் அவரை விடாமல் துரத்தியது.எனவே, நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். ஆனால், அவரது திக்குவாய்ப் பிரச்னையால் பல தொலைக்காட்சிகள் அவரை நிராகரித்தன. இருந்தபோதும் இப்படி ஒரு கடினமான சூழலிலும் அவர் தன் திறமையை நம்பினார். ஒருநாள் தனக்கு என்ன குறை என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, அவர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். சில கேரக்டர்களைச் செய்யும்போது மட்டும் அவரால் சரளமாக, திக்காமல் பேச முடிந்தது. அந்த சுய தரிசனமே அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த சுய தரிசனம் இதுதான். மற்றவர்கள் கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை பேசும்போது மட்டுமே அவருக்குத் திக்கியது. அவரது சொந்த ஸ்கிரிப்ட்டைப் பேசும்போது சரளமாகப் பேச முடிந்தது. இதனை புரிந்து கொண்ட அவர் தொடர்ந்து முயன்றார். ஆனாலும் வழக்கம்போல நிராகரிக்கப்பட்டார். காரணம் திக்குவாய் தவிர, அவருக்கு அழகான முகமோ கதாநாயகனுக்குரிய உடல் வாகோ இல்லாததையும் ஒரு குறையாகக் கூறி நிராகரித்தார்கள். அதற்காக அந்த நடிகர் சற்றும் சோர்வடையவில்லை. புதுமையாய் முயன்றார். அதன் விளைவு. அவரைப் பற்றி மற்றவர்கள் நினைத்த அனைத்துமே தவறான முடிவுகள் என்பதைத் தன் வெற்றியின் மூலம் நிரூபித்தார். இப்படித்தான் தொலைக்காட்சிகளில் மிஸ்டர் பீன் (Mr. Bean) சீரியல் உலக அளவில் சக்கை போடு போடத் தொடங்கியது.

மிஸ்டர் பீன் ரோவன் அட்கின்ஸன் மற்றும் ரிச்சர்ட் கர்டிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிட்டானிய நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது டைகர் ஆஸ்பெக்ட் புரொடக்ஷன்சால் தயாரிக்கப்பட்டதாகும். இதில் அட்கின்ஸன் தலைமைப் பாத்திரமான மிஸ்டர் பீன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். இத்தொடர் கர்டிஸ் மற்றும் ராபின் டிரிஸ்கால் உடன் இணைந்து, எழுதிய 15 அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. இதன் முதல் அத்தியாயம் மட்டும் பென் எல்டன் என்பவர் ரோவன் அட்கின்ஸனுடன் சேர்ந்து எழுதினார். 15 பகுதிகளில் 14 பகுதிகள், ஐடிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1990 ஜனவரி 1 முதல் 1995 டிசம்பர் 15 வரை ஒளி பரப்பப்பட்டது. ‘ஒரு வயதுவந்த மனிதனுக்கு உள்ளேயுள்ள ஒரு குழந்தை’ என்று மிஸ்டர் பீன் பாத்திரம் குறித்து அட்கின்ஸன் விவரித்தார். அன்றாடப் பணிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க மிஸ்டர் பீன் எடுக்கும் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏற்படும் சம்பவங்களாக இந்தத் தொடர் நாயகனின் கதை தொடர்கிறது.

தொடரின் பெரும்பகுதி நகைச்சுவையானது, அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மற்றவர்களைப் போன்றல்லாமல் வழக்கத்திற்கு மாறாக அவர் அசாதாரணமாக தீர்வுகளைப் பெறுகிறார். ஜாக்குவெஸ் டாட்டி மற்றும் ஊமைத் திரைப்படங்களில் நடித்த பல காமிக் நடிகர்கள் போன்ற கலைஞர்களால் இந்தத் தொடர் பெரிதும் புகழப்பட்டது. மிஸ்டர் பீன் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் ஆனார்.

தனக்கான கதையைத் தானே எழுதி நடிக்கத் தொடங்கிய ரோவன் அட்கின்ஸன் இன்று உலக அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம். அவரைத் தெரியாத குழந்தைகள் உண்டா? அவரது வாழ்க்கை நமக்குச் சொல்வது வெற்றி பெற அழகான முகமோ, கவர்ச்சியான குரலோ, வசீகரிக்கும் உடலோ தேவையில்லை.கடும் உழைப்பும், கொஞ்சம் தனித்தன்மையுடன் கூடிய ஐடியாவும் இருந்தால் போதும். நம்மை நாம் உணர்ந்தால் உலகத்தையும் அதை உணர வைக்க முடியும். உங்கள் சுய தேடலை, சுயமதிப்பீட்டை, உங்கள் கனவின் நிறத்தை, உங்கள் தனித்திறன் எதுவென்று இன்றே மதிப்பீடு செய்யுங்கள். அதற்கேற்ப உங்கள் முயற்சியைத் திட்டமிடுங்கள். நடிப்போ,இசையோ, ஓவியத்திறனோ எதுவாக இருந்தாலும், மிஸ்டர் பீன் போல மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவத்துடன் வெளிப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

Related posts

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்