தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தவர்களின் பணியை நிரந்தர நர்சுகள் பணியுடன் ஒப்பீடு செய்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் குழு அமைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015ல் தொகுப்பூதிய அடிப்படையில் 10,000 நர்சுகள் பணியமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகளாகியும் 4,000 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்த வழக்கில், தொகுப்பூதிய நர்சுகள் நிரந்தர நர்சுகளுக்கு இணையாக பணி செய்தால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர நர்சுகளின் பணியுடன், தொகுப்பூதிய நர்சுகள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்று கடந்த 2018ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அரசு நிறைவேற்றாததால், அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு, ஒப்பந்த நர்சுகள், நிரந்தர நர்சுகளின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய சரிபார்ப்பு குழுவை அமைத்தனர். இந்த குழுவினர் பணிகளை முடித்து மார்ச் 8ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி