தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

புதுடெல்லி: தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில், மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் கவுன்சலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ நீட் நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நீட் கவுன்சிலிங் நேற்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஜூலை முதல் வாரத்தில் 6ம் தேதி கவுன்சலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று கவுன்சிலிங் தொடங்கவில்லை.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதல்கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கும் புதிய கல்லூரிகளில் எத்தனை சீட்கள் உள்ளன என்பது உறுதிப்படுத்தியதும் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும். மேலும், சில மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளன. அந்த பணிகளுளம் நடந்து வருகிறது. எனவே இம்மாத இறுதிக்குள் நீட் கவுன்சலிங் தொடங்கப்படும்’’ என கூறி உள்ளனர். கடந்த மாதம் நீட் கவுன்சிலிங்கை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், கவுன்சலிங்கை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கை 2 நாட்களுக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதுதவிர, நீட் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்த சூழலில் நீட் கவுன்சலிங் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* வெளிப்படையான மறுதேர்வு வேண்டும்
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘நீட் வினாத்தாள் கசியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு கூறியிருப்பது மிகப்பெரிய பொய். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து விட்டனர். ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகளும், ஏமாற்று வேலைகளும் நடந்திருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் கூறியிருக்கிறது. இது தவறாக வழிநடத்தும் செயல். பாஜவும் ஆர்எஸ்எஸ்சும் கல்வி மாபியா கும்பல்களை ஊக்கப்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த கல்வி அமைப்பையே அழிக்கின்றனர். அனைத்து வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வெளிப்படையான முறையில் நீட் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்’’ என்றார். முறைகேட்டிற்கான வலுவான ஆதாரம் இல்லாமல், மறுதேர்வு நடத்துவதால் நியாயமாக தேர்வெழுதி வெற்றி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து

வேலையின்மையால் இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியம்.. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்துங்கள்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!!

புகார் அளித்த சேலம் பெரியார் பல்கலை. ஊழியர்களுக்கு மிரட்டல்?