வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே பரிசோதனை, சிகிச்சை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: கால்நடை வள்ர்ப்போர் கோரிக்கை

திருத்தணி: திருத்தணியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று 10 ஆண்டுகளாக கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் வளர்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்கள் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. அதற்கு அடுத்து பசுக்கள், ஆடுகள், கோழிகள் உள்பட கால்நடைகள் வளர்ப்பு அதிக அளவில் உள்ளது.

கால்நடைகளுக்கு மருத்துவ சேவை வழங்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் திருத்தணி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 4 ஒன்றியங்களில் 23 கால்நடை மருந்தகங்கள், 6 கிளை நிலையங்கள், 1 பார்வை கிளை நிலையம், 1 பார்வை கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகின்றது. இருப்பினும், போதுமான கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், கூடுதல் பொறுப்பு வகித்து வரும் உதவி மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே கால்நடை மருந்தகம் சென்று கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், குறிப்பாக கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு திருவள்ளூர் கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் கால்நடை வளர்போர் பாதிக்கப்படுகின்றனர்.

உரிய சிகிச்சை வழங்க முடியாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட பசு, எருமைகள் உட்பட செல்ல பிராணிகள் உயிரிழந்து விடுகின்றன. இதனால் கால்நடைகள் நம்பி குடும்பத்தை நடத்தி வரும் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இங்குள்ள மருந்தகத்திற்கு தினமும் 100 முதல் 150 கால்நடைகள், 10 முதல் 20 நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் சிகிச்சை பெறுகின்றன. இந்த கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு அகிய பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்போர் காலம் மற்றும் பணம் விரையம் இன்றி தங்களது கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று பயனடைவார்கள்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்