தேர்வு மையம் வாரியாக வெளியிடப்பட்ட நீட் முடிவுகள் குஜராத், ராஜஸ்தானில் மெகா மோசடி?

* ஒரே மையத்தில் அதிக தேர்ச்சி விகிதத்தால் சந்தேகம்
* பல மாணவர்களின் மதிப்பெண் இல்லாததால் அதிர்ச்சி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், பாஜ ஆளும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரே மையத்தில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மெகா மோசடி நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதே சமயம், பல மாணவர்கள் தங்களின் மதிப்பெண்ணே இப்பட்டியலில் இல்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 4750 மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 24 லட்சத்து 6 ஆயிரத்து 79 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டம் செய்ததாகவும் புகார்கள் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பாக, வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த அரியானாவின் ஜாஜ்ஜர், ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளி, குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் சர்வதேச பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் அதிக தேர்ச்சி விகிதம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இப்பட்டியலை நீதிமன்றம் வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் வேறு சில மோசடிகள் அம்பலமாகி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, பாஜ ஆளும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான மாணவர்கள் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உதாரணத்திற்கு, ராஜஸ்தானின் சிகாரில் மொத்தம் 49 தேர்வு மையங்களில் 27 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் 4,200 பேர் 720க்கு 600க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 2,000க்கும் அதிகமானோர் 450க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 79,500 பேர் 600க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் டாப் 30 ஆயிரம் இடங்களில் வர முடியும் என்பதால் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். அந்த வகையில் சிகாரில் மட்டுமே 2,037 மாணவர்கள் அரசு கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இங்குள்ள ஒரே தேர்வு மையத்தில் 155 பேர் 600க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேசிய அளவில் 650க்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களின் சராசரி விகிதம் 1.29 சதவீதமாக இருக்கையில், சிகாரில் உள்ள தேர்வு மையங்களில் மட்டும் 7% சதவீதம் பேர் 650க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அதிக மதிப்பெண் எடுக்கப்பட்ட 50 தேர்வு மையங்களில் 37 தேர்வு மையங்கள் சிகாரை சேர்ந்தவை. இங்குதான் ஏராளமான நீட் கோச்சிங் சென்டர்கள் இருப்பதால் மெகா மோசடி நடந்திருக்கிறதா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

நாட்டிலேயே 700 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அதிக மாணவர்களை கொண்ட மாநிலம் ராஜஸ்தான். அங்கு 482 பேர் 700க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற நிலையில், அதில் சிகாரில் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே 149 பேர். இதே போல, குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஆர்கே பல்கலைக்கழக தேர்வு மையத்தில் (எண்: 220701) 1968 மாணவர்கள் தேர்வு எழுதி 1387 மாணவர்கள் நீட் தகுதி மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இந்த மையத்தில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் 700 மதிப்பெண்களும், 115 மணவர்கள் 650க்கு மேல் மதிப்பெண்ணும், 259 மாணவர்கள் 600க்கு மேல் மதிப்பெண்ணும், 403 பேர் 550க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

அதே போல அகமதாபாத்தில் டெல்லி பப்ளிக் பள்ளி மையத்தில் 12 மாணவர்கள் 700க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.ராஜஸ்தானை தொடர்ந்து அதிக மதிப்பெண் எடுத்த அதிக மாணவர்களை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இதுவும் பாஜ ஆளும் மாநிலம். இங்கு 205 பேர் 700க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த சம்பவங்கள் நீட் தேர்வு முடிவில் பெரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளன. அதே சமயம், என்டிஏ வெளியிட்ட இந்த பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து சில மாணவர்கள் கேள்வி எழுப்பியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சண்டிகரைச் சேர்ந்த மாணவியின் தாய் ஒருவர் எக்ஸ் தளத்தில் தனது மகள் நீட் தேர்வில் 614 மதிப்பெண் பெற்றதாகவும், ஆனால் என்டிஏ வெளியிட்ட தேர்வு மையம் வாரியான பட்டியலில் மாணவி எழுதிய தேர்வு மையத்தில் யாருமே 614 பெற்றதாக குறிப்பிடவில்லை எனவும் பதிவிட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அதே போல, அரியானாவின் பகதூர்கர்க் ஹர்தயாள் பப்ளிக் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் தங்கள் 718 மற்றும் 719 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், ஆனால் 6 மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றிருப்பதாக என்டிஏ வெளியிட்ட பட்டியலில் காட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட பட்டியலில் உண்மையானது தானா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

* 11,000 பேருக்கு பூஜ்யம் மைனஸ் மதிப்பெண்

நீட் தேர்வில் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும். அந்த வகையில், 9,400 பேர் மைனஸ் மதிப்பெண் பெற்றுள்ளனர். வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக்கில் உள்ள தேர்வு மையங்களில் 7 பேர் நெகடிவ் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர் ஒருவர் மைனஸ் 180 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுவே மிகவும் குறைவான மதிப்பெண். மேலும் 2,250 மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றுள்ளனர்.

* யு.பி.எஸ்.சி, நீட் தேர்வு முறைகேடு மூலம் கல்வியில் சிறந்த தென் மாநிலத்தவர்களை பின்னுக்கு தள்ளும் முயற்சி அம்பலம்

நீட் மற்றும் யு.பி.எஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது. கல்வியை பொறுத்தவரையில் தென் மாநிலத்தவர்கள் குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள் என்றைக்குமே படிப்பில் கெட்டிக்காரர்கள். தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியே இருக்கும். ஆனால், நீட் நுழைவுத் தேர்வு, யுபிஎஸ்சி நடத்தும் ஒன்றிய அரசு வேலைக்கான தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்களாகவே இருப்பார்கள். தற்போது நீட் மற்றும் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மோடி ஆட்சியில் அறிவில் சிறந்த தென் இந்தியர்களை புறக்கணித்து வட இந்தியர்களை மருத்துவ படிப்பில், ஒன்றிய அரசு வேலை வாய்ப்பில் நுழைக்க தொடர் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Related posts

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு