தேர்வு மோசடிகள்

புதிய கல்வி கொள்கை தொடங்கி உயர்கல்வியை எப்படியெல்லாம் சிதைக்க முடியுமோ, அந்தளவுக்கு பாழ்படுத்திய ஒன்றிய அரசு, தேர்வுகள் மூலமும் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்காக இவ்வாண்டு நடைபெற்ற நீட்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறின. நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவு, தேர்வு எழுதியவர்களில் 1563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் சுப்ரீம் கோர்ட் படியேறிவிட்டன.

நீட் தேர்வு தொடங்கும் முன்பே வடமாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விட்டது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப நடத்தப்படும் நெட் தேர்விலும் வினாத்தாள்கள் கசிந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் நேற்று நடக்கவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒன்றிய உயர்கல்வித்துறையில் என்னதான் நடக்கிறது என கேள்வி எழுப்பினால், முறைகேடுகள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.

இத்தேர்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நடத்தும் தேசிய தேர்வு முகமை கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தேர்வுகளில் வெளிப்படைத்தன்மைக்காக உருவாக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை, தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. தேசிய அளவில் செயல்படும் தேர்வு முகமை மீது யாருக்குமே நம்பிக்கை வர மறுக்கிறது. இதன் விளைவாக தற்போது ஒன்றிய அரசு தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத் குமாரை நீக்கிவிட்டு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப்சிங் சுரோலாவை புதிய தலைவராக நியமித்துள்ளது.

தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை வழங்கவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. நீட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நெட் தேர்வு முறைகேடுகளும் சிபிஐ விசாரணையில் உள்ளது.

முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கையாலாகாத ஒன்றிய அரசின் தேர்வு முறைகள் சவப்பெட்டியின் மீது அறையப்படும் இறுதி ஆணிகளாகவே இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஒன்றிய அரசுப்பணி மற்றும் மாணவர்களின் படிப்புகளுக்கான தேர்வுகளை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 41 வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதை பார்க்கும்போதெல்லாம் தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிக்கும்போது மட்டும் ஒன்றிய அரசும், தேர்வு முகமை அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்கிறார்களோ என்கிற ஐயமும் எழுகிறது. இவ்வாறு வினாத்தாள்கள் அடிக்கடி கசிவதால், அதற்காக அல்லும் பகலும் படித்து உழைக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. குறுக்கு வழியை நாடும் சில மாணவர்கள் எளிதில் தேர்வில் வெற்றி பெற்று தங்கள் கனவுகளை நனவாக்க முற்படுகின்றனர். தேசிய தேர்வு முகமை மீது மாணவர்களது நம்பிக்கையின்மை தொடர்ந்து குறைய ஆரம்பித்தால், அதை கலைத்து விடுவதே உத்தமம்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது