மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீடுகளால் வன்னியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருகிறார்கள்: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் நிரூபணம்

சென்னை: மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடுகளால்தான் வன்னியர்கள் அதிகமாக பயன் பெறுகிறார்கள் என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக புள்ளி விவரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள சில குறிப்பிட்ட பிரிவினர் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் எனும் ஒரு பிரிவை உருவாக்கி அவர்கள் பயன்பெறும் வகையில் 20 சதவிகித இடஒதுக்கீடுகளை 1989ம் ஆண்டில் கலைஞர் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த 20 சதவிகித இடஒதுக்கீட்டினை இன்றும் முக்கியத்துவம் அளித்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அந்த இடஒதுக்கீட்டு முறை வன்னிய சமுதாய த்தினருக்கு அதிக அளவில் பயனளிக்கிறது. இதனை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.
2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு மொத்தம் 24,330 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடுகள் மூலம் 4,873 மாணவர்கள் தேர்வானார்கள். இவர்களில் வன்னியர் சமுயதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 2,781 மாணவர்கள். இது 11.4 சதவிகிதமாகும்.

தமிழ்நாடு அரசு வழங்கிவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5 சதவீதத்தினைவிட கூடுதலாக 13.8 சதவிகிதம் அதாவது 3,354 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மொத்த மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 6,966. இதில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1,363 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வன்னிய சமுதாய மாணவர்கள் மட்டும் 940 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இது 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.5 சதவிகித வன்னிய மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது.

பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்தம் 6,234 இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினருக்கான இடங்கள் 933. இதில் வன்னியர்கள் 437 பேர். இது 10.7 சதவிகிதமாகும். பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 751. இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த 137 பேர் பல் மருத்துவ கல்லூரி பட்ட மேற்படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 66 பேர். இது மொத்த இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 11.2 சதவிகிதமாகும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-4 தேர்வுகளில் 2012-2022 வரை தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் 26,784 பேர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 5,215 பேர். இது மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களில் வன்னியர்கள் மட்டும் 19.5 சதவிகிதமாகும். தமிழ்நாடு அரசு பணியாளர் குரூப்-2 தேர்வுகளில் மொத்தம் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் 2,682 பேர். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினரில் மொத்தம் தேர்ச்சி பெற்றோர் 366 பேர். இவர்களில் 20 சதவீதத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த வன்னியர்கள் மட்டும் 270 பேர். இது மொத்த நியமனங்களில் 11.2 சதவிகிதமாகும்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் நியமன வாரியத்தின் கீழ் 2013-2022ம் ஆண்டுகளில், 1,919 பேர் காவல் உதவி ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மிகப் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 605 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 327 பேர். அதாவது 17 சதவிகிதத்தினர். இது பாட்டாளி மக்கள் கட்சி கோரும் 10.5 விழுக்காட்டைவிட அதிகம். இதேபோல், 2013 மற்றும் 2022க்கு இடையில் தமிழ்நாடு மருத்துவ சேவை நியமன வாரியத்தினால் பணியமர்த்தப்பட்ட 8,379 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 1,433 பேர் நியமனம் பெற்றனர். இவர்களில் வன்னியர்கள் 1,185 பேர்.

இது மொத்த நியமனங்களில் 17.1 சதவிகிதமாகும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 3,044 முதுநிலை ஆசிரியர்களில் 17.5 விழுக்காடு ஆசிரியர்கள், அதாவது 383 பேர் வன்னியர்கள். இதன்மூலம், மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வன்னிய சமுதாயத்தினர் அதிகமாகவே பயனடைந்து வருகின்றனர். அதேநேரம், பாமக கோருகின்ற 10.5 சதவிகித இடஒதுக்கீடுகளால் வன்னிய சமுதாயத்திற்கு குறைவான பயன்களே கிடைக்கின்றன என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவிலிருந்து மீன் கழிவுநீரை கொண்டு வந்து பொள்ளாச்சி சாலையில் கொட்டிய லாரி சிறைபிடிப்பு..!!

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு..!!

நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்கள்!