‘விட்டமின் ப’ கொடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் காட்டாத நிர்வாகிகள் மீது எகிறிய மாஜி அமைச்சர்கள்பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சிறை தோட்டத்துல கமகமக்கும் கறி சமையல் பற்றி தெரியுமா?…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் சென்ட்ரல் பிரிசன் செயல்பட்டு வருது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்காங்க.. ஜெயிலின் வெளிப்பகுதியில் சிறிய தோட்டம் இருக்குது.. சிறைக்குள் எந்த தவறும் செய்யாத நன்னடத்ைத கைதிகளை வார்டன்கள் அழச்சிக்கிட்டு போய், அங்க வேலை செய்வாங்க.. தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது என்ற பணிகள் நடக்கும்.

அதுவும் ரெண்டு கைதிய 4 வார்டன்கள் அழைச்சிக்கிட்டு போவாங்க.. அப்படியே காத்தாட, காலாற நடந்துக்கிட்டு மாலையில் ஜெயிலுக்குள்ள போவாங்க.. ஆனா இவ்வாறு தோட்டத்துக்கு போவதில் தலைமை வார்டன், சக கைதிகள் ெராம்பவே மகிழ்ச்சியா இருப்பாங்களாம்.. ஜெயிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் இருக்குது.. அதையும் தாண்டி 3 இடங்களில் ஈசியா உள்ளே வரலாம்.. இந்த பாதையில வரும்போது, பன்றி கறியும் அதற்கான மசாலாவும் தயாராக இருக்குமாம்..

இதனை எடுத்துக்கிட்டு வேலைக்கு செல்லும் டீம், அப்படியே தோட்டத்துக்குள்ள சமையலை தொடங்குவாங்களாம்.. ஒரு அரைமணி நேரத்துல கமகமக்கும் கறி தயாராகி விடுமாம்.. அங்கேயே அமர்ந்து ஒரு பிடி பிடிச்சிக்கிட்டு, மாலை நேரத்துல வேலைக்கு போயிட்டு வந்த களைப்புல ஜெயிலுக்குள்ள போவாங்களாம்.. கிளம்பி போகும்போது, மண் பானையை சுத்தமா கழுவி வச்சிட்டுதான் போவாங்களாம்.. உள்ளே போகும்போது கறிவாசம் தூக்குமாம்.. அது எப்படின்னு வாட்ச் செய்யும்போதுதான் இந்த விவகாரம் வெளியே தெரிஞ்சதாம்..

வாரம் ஒரு நாள் தான் சிக்கன் குழம்பு கிடைக்குது.. ஆனால் நாம் விரும்பிய கறியை அருமையா சமைத்து சாப்பிடுவது என்பதே தனி சுவை தான். இதனால உடம்பு ரொம்பவே ஆரோக்கியமா இருக்குதுன்னு அந்த கைதி நெஞ்சை நிமுத்துறாராம்.. இந்த கறி சமாச்சாரம் தற்போது கசிஞ்சிபோச்சாம்.. என்ன நடக்கும் என்பது போகபோகத்தான் தெரியுமுன்னு சக வார்டன்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் காட்டாததால் இலைக்கட்சி நிர்வாகிகளை மாஜி அமைச்சர்கள் கடிந்து கொண்டார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கள்ளக்குறிச்சியில் விஷசாராய உயிரிழிப்பு தொடர்பாக இலைக்கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க.. இதில் டெல்டாவில் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ‘விட்டமின் ப’ கொடுத்தாவது அதிகளவில் கூட்டத்தை காட்ட வேண்டும்னு ரெண்டு நாளுக்கு முன்னாடியே பொறுப்பு மாஜி அமைச்சர்களிடமிருந்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததாம்…

இந்த உத்தரவை தொடர்ந்து நிர்வாகிகள் முதல்நாளே ‘விட்டமின் ப’ கொடுத்து அதிகளவு கூட்டத்தை காட்ட அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்காங்க.. ஆனால், அவர்கள் எடுத்த முயற்சி பெரிய அளவில் கை கொடுக்கவில்லையாம்.. எதிர்பார்த்த அளவுக்கும் கூட்டம் வரவில்லையாம்… இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு ஆளான மாஜி அமைச்சர்கள், ‘விட்டமின் ப’ கொடுத்து கூட உங்களால் கூட்டம் காட்ட முடியவில்லையா என நிர்வாகிகளை ரொம்பவே கடிந்துகொண்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரெண்டு ஸ்டார் காக்கிகள் இடமாற்றத்தில் ஏதோ புகைச்சலாமே என்ன சமாச்சாரம்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல எம்பி எலக்‌ஷனுக்கு முன்னாடி, 3 ஸ்டார், 2 ஸ்டார் காக்கிகளை இடமாற்றம் செஞ்சாங்க.. அவங்க ஏற்கனவே ஒரே இடத்துல 3 வருஷத்துக்கு மேல பணியாற்றியதாலதான் இடமாற்றம் செஞ்சாங்களாம்.. இப்படி பல பேர இடமாற்றம் செஞ்சாங்க.. இப்போது இடமாற்றம் செய்த 2 ஸ்டார் காக்கிள் திரும்பவும் பழைய இடத்துக்கே வந்துட்டாங்களாம்..

இந்த இடமாற்றம் தான் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்குது.. திரும்பவும் பழைய இடத்துக்கு வந்த 2 ஸ்டார் காக்கிகள், மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களோட விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செஞ்சிருக்குறதாக சக காக்கிகளே குற்றம் சொல்றாங்க.. அவங்கதான் வேலை செய்ற மாதிரியும், மற்றவங்க கடமைக்கு வேலை செய்ற மாதிரியும் இருக்குது.. நாங்க எல்லாம் தொடர்ந்து பல இடங்களுக்கு சென்று பணிபுரிய வேண்டிய கட்டாயத்துல இருக்கிறோம்.

அவங்களுக்கு ஒரே இடத்தை எழுதிகொடுத்தது போல பணியாற்றி வர்றாங்க.. இதையெல்லாத்தையும் உயர் காக்கிகள் விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுத்து சமமாக இடமாற்றம் செய்யணும்னு காக்கிகளிடமிருந்து கோரிக்கை குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டாங்களாமே..’’ என்னவாம் எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘அணையில் தண்ணீர் இருக்கிறது, வயலுக்கு வர மறுக்கிறது.

இதுதான் கடந்த சில ஆண்டுகளாக கடைகோடி மாவட்டத்தின் பாசன நிலைமை. கால்வாய்கள் உடைப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் மெத்தனப்போக்கு இதற்கு காரணம்னு கூறி வந்த விவசாயிகள் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டிருக்காங்க.. நீர்வளத்துறையின் அதிகாரியாக பணியாற்றுபவருக்கும், விவசாயிகளுக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகவில்லையாம்..

விவசாயிகள் திட்டமிடுவது ஒன்றாகவும், அதிகாரி திட்டமிடுவது ஒன்றாகவும் இருப்பதால் அவ்வப்போது மோதல் போக்கு தொடர்கிறதாம்.. இது விவசாயத்தையும் கணிசமாக பாதிக்கிறது. ஆனால் மாவட்ட உயர் அதிகாரியோ இதில் கீழ்நிலையில் உள்ள அதிகாரியை கண்டிப்பது, அறிவுறுத்துவது இல்லை என்கின்றனர். இதுவே பிரச்னைகள் ரப்பராய் இழுத்துக்கொண்டிருப்பதற்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை: ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம், போதைப்பொருள் விற்பனையை தடுக்க கிராம அளவிலான கண்காணிப்பு குழு

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்