முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 1 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று ஆய்வு

அடையாறில் திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு