எல்லாம் காவிமயம்

இந்தியாவில் ஒன்றிய பாஜ அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் அக்கட்சியின் நிறமும், குணமும் மாறுவதாக தெரியவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே நாடு, ஒரே மொழி என நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து, அனைத்திலும் ஒற்றை முறையை உருவாக்கும் பாஜவிற்கு, நாடே காவிமயமாக காட்சியளிக்க வேண்டும் என்பது கனவாக உள்ளது. அனைத்து ஒன்றிய அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவிமயமாக காட்சியளிக்கின்றன. இதற்காகவே புதிய நாடாளுமன்றத்தை கட்டியிருப்பார்களோ என்று கூட எண்ண தோன்றுகிறது.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து வந்த பாஜ, இப்போது ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதியையும் விட்டு வைக்கவில்லை. அரசின் செய்தி சேனலான டிடி நியூஸ் கடந்த 16ம் தேதி அதன் செட் டிசைனை மாற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் அதன் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிடி நியூஸ் சேனலின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதற்கு தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது பிரச்சார் பாரதியா அல்லது ஒன்றிய அரசின் பிரசார பாரதியா என்ற கேள்விக்கணைகள் எங்கும் எழுகின்றன.

டிடி நியூஸ் நிர்வாகம் இதை முன்னெப்போதும் இல்லாத புதிய அவதாரம் என கூறிக்கொண்டாலும், எதிர்கட்சிகள் விடுவதாக இல்லை. இந்த அவதாரத்தை அவர்கள் ஆபத்தாக கருதுவதோடு, தேர்தல் சமயத்தில் வாக்குகளை அறுவடை செய்திட பாஜ இப்படியொரு யுக்தியை கையாளுகிறது என குற்றம் சாட்டுகின்றனர். இதுபோல் ஜி 20 மாநாடு லோகோவிலும் காவி நிறமும் பாஜவின் தாமரையும் காணப்பட்டதையும் எதிர்கட்சிகள் ஏற்கனவே எதிர்த்தன. பாஜ அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை தங்கள் கட்சியின் ஒரு அங்கமாகவே கருதி, அவற்றை வேலைவாங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது டிடி நியூஸ் சேனலையும், தங்கள் கொள்கை பிரசாரத்தை முழங்கும் சேனலாக மாற்ற தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியானது, தனது பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றி கொண்டதற்கும் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக தூர்தர்ஷனில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்பு செய்ய கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். கேரள மாநிலத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இந்த படத்தை ஒளிபரப்பும் முடிவை கைவிட அவர் கேட்டு கொண்டார்.

ஆனால் அதையும் மீறி கடந்த 5ம் தேதி தூர்தர்ஷனில் கேரளா ஸ்டோரி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சங் பரிவாரங்களின் கைப்பாவையாக தூர்தர்ஷன் மாற தொடங்கிவிட்டது அப்போதே வெட்ட வௌிச்சமானது. மேலும் தூர்தர்ஷனில் தற்போது ஆளும் பாஜவின் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கி செய்திகள் வெளியாகி வருகின்றன. எதிர்கட்சிகளின் கருத்துகளுக்கு போதிய இடம் தரப்படுவதில்லை. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆளும் பாஜ அரசு எப்படி பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததோ, அதுபோல் தூர்தர்ஷனையும் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து அழிக்க முற்படுகிறது என்பதுதான் வேதனையாகும். தேர்தல் முடிவுகளாவது தூர்தர்ஷனை காப்பாற்றி, அதற்கு வாழ்வளிக்கட்டும்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்