அனைவரது வாழ்விலும் துன்பங்கள் விலகி இன்பம் பெருகட்டும்: தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும்.

* ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): தீபஒளி திருநாளில் மக்களின் உள்ளங்களில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும். அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழட்டும்.

* கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும்.
* அன்புமணி (பாமக தலைவர்): மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும்.

*ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தீபாவளி திருநாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

*சரத்குமார் (சமக தலைவர்): உயர்ந்த சிந்தனைகளுடன், அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்தி, உலகெங்கும் வாழும் இந்திய மக்கள அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

*டி.டி.வி.தினகரன் (அமமுக பொது செயலாளர்): சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாகவும் தீபாவளி திருநாள் அமையட்டும்.

*மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ‘விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும். ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும். ஆகாயம் பார்த்திருக்கும் அருமை நிலம் செழிக்கட்டும். தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும்’

*என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்): தீபஒளி ஏற்றி இஷ்ட தெய்வங்களை வணங்கி அனைவரும் புத்தாடைகள் அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.

*பிரசிடெண்ட் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்): நலமும், வளமும் எல்லா நாட்களிலும் நமக்கு கிடைக்க இந்த தீப ஒளி திருநாள் ஒரு தொடக்கமாய் இருக்கட்டும். இனிவரும் எல்லா நாட்களும் எட்டுத்திக்கும் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளியாய் மாறட்டும்.

*எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம் தலைவர்): ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களை சூழ்ந்திருக்கும் கொடிய துன்பங்கள், வறுமைகள் என்கிற நரகாசுரனை வீழ்த்தி அனைவரது வாழ்விலும் தீபாவளி திருநாளில் தீபமாக ஒளி ஏற்று வோம். இதுபோல புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!