யூரோ கோப்பை கால்பந்து சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்: பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்

ஃபிராங்க்பர்ட்: யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் காலிறுதியில் விளையாட போர்ச்சுகல் அணி தகுதி பெற்றது. ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் நேற்று நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் – சுலோவேனியா அணிகள் மோதின. நட்சத்திர வீரர் கிறியஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னணி அணிக்கு உரிய வேகத்துடன் விளையாடியது. ஆனால், அதன் கோலடிக்கும் முயற்சிகளை சுலோவேனியா கோல் கீப்பர் ஒப்லாக் அற்புதமாக தடுத்தார். தற்காப்பு ஆட்டக்காரர்களும் உறுதியுடன் போராடி போர்ச்சுகல் அணியின் தாக்குதலை முறியடித்தனர். சுலோவேனிய வீரர்கள் 4 பேருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும், போர்ச்சுகலால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. சுலோவேனியாவுக்கு அரிதாக கிடைத்த வாய்ப்பையும் போர்ச்சுகல் கோல்கீப்பர் கோஸ்டா துடிப்பாக செயல்பட்டு தடுத்தார். 90 நிமிட ஆட்டம் 0-0 என டிராவில் முடிய, கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. 103வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடிக்க ரொனால்டோ மேற்கொண்ட முயற்சியை ஒப்லாக் அற்புதமாகத் தடுத்தார். ரொனால்டோவின் ஒவ்வொரு கோல் முயற்சியும் வீணாகும்போது அவர் சோகமாவதும், மற்ற வீரர்கள் தேற்றுவதும் தொடர்கதையாக இருந்தது.

கூடுதல் நேரமும் 0-0 என கோலின்றி முடிவுக்கு வந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது (தலா 5 வாய்ப்பு). அதில் சுலோவேனியா வீரர்களின் 3 வாய்ப்புகளை போர்ச்சுகல் கோல் கீப்பர் கோஸ்டா முறியடித்தார். அதே சமயம், போர்ச்சுகல் தரப்பில் ரொனால்டோ, பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா துல்லியமாக கோல் அடிக்க… போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக, பிரான்ஸ் – பெல்ஜியம் மோதிய ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் வெர்டோனகனின் சுய கோலால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது. ஜூலை 5ம் தேதி நள்ளிரவு நடக்கும் 2வது காலிறுதியில் பிரான்ஸ்-போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Related posts

‘மூன்றில் ஒரு பங்கு’

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது