உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிக்கிய மாஜி கடற்படையினர் 8 இந்தியர்கள் மரண தண்டனை ரத்து: கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: கத்தாரில் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. கத்தாரின் தோகாவை சேர்ந்த அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டை கத்தார் அதிகாரிகள் வெளியிடவில்லை. தஹ்ரா நிறுவனம், கத்தார் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பினருக்கு பயிற்சி அளிக்கும் பணியை செய்து வந்தது. கத்தார் அரசு தயாரிக்கும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலின் தகவல்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம் 8 முன்னாள் வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து கடந்த அக்டோபரில் தீர்ப்பளித்தது. 8 பேரின் தண்டனையை ரத்து செய்து மீட்க அவர்களது குடும்பத்தினர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்திய அரசு கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தது. அதே சமயம், பிரதமர் மோடி சமீபத்தில் துபாயில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து பேசினார். இதில், கத்தார் வாழ் இந்தியர்கள் நலன் குறித்து விவாதித்தாக மோடி குறிப்பிட்டார். இந்நிலையில், இந்தியர்களின் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், 8 பேரின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘இன்றைய தீர்ப்பின் போது, கத்தாருக்கான இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகள், 8 முன்னாள் வீரர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் இருந்தனர். அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகே, தண்டனை குறைப்பு குறித்த முழு விவரமும் தெரிய வரும் என தூதரக அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த 8 வீரர்களில் ஒருவரான கேப்டன் நவ்தேஜ் கில், தமிழ்நாட்டின் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியபோது ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு