செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காட்சி பொருளான எஸ்கலேட்டர்: பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், பொதுமக்கள் பயன்படுத்த முடியதாக அளவிற்கு எஸ்கலேட்டர் காட்சி பொருளாக உள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் வசதிக்காக 9 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் நிலையத்தில் விடிய விடிய‌ பயணிகள் நடமாட்டம் இருக்கும். இந்த இரயில் நிலையம் மார்க்கமாக விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கும் மற்றும் மும்பை திருப்பதி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினசரி செல்லக்கூடிய பொதிகை, கம்பன், சோழன், திருச்செந்தூர், குருவாயூர் உள்ளிட்ட விரைவுரயில்கள், பல்லவன் வைகை உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் சென்று வருகின்றன.

இவைதவிர, மும்பை செல்லும் லோக்மானியதிலக் அதிவிரைவு ரயில், ஆந்திர மாநிலம் செல்லும் கச்சிக்கூடா எக்ஸ்பிரஸ் என தினசரி 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த செங்கல்பட்டு ரயில்வே சந்திப்பில் பயணிகளை‌ ஏற்றி‌செல்கிறது. இதுதவிர, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் விடியற்காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ந்து செல்வதும் வருவதுமாக இருக்கும். இந்த ரயில் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இரண்டாவது நடைமேடை துவங்கி 9வது நடைமேடை வரை செல்வதற்கு படிக்கட்டைத்தான் பயன்படுத்தியாக வேண்டும்.

இதில், இரண்டு படிக்கட்டுகள் ஆரம்ப காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்கள், படிக்கட்டில் ஏற முடியாத முதியவர்கள் பயன்படுத்தும் விதமாக இரண்டாவது நடைமேடையில் ஒரு எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டு பல மாதங்களாக பயணிகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும், பயணிகள் அதை பயன்படுத்தாமல் பழைய படிக்கட்டையே பயன்படுத்தி வருகிறார்கள். வெளியில் டிக்கெட் எடுத்துக்கொண்டு இரண்டாவது நடைமேடை வந்ததும் கண்ணில் தென்படுவது பழைய படிக்கட்டுகள் தான்.

பின்பக்கம் சுற்றி எஸ்கலேட்டர் மூலம் செல்வதை விட படிக்கட்டுகள் மூலம் ஏறி விரைவில் ரயிலை பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். இதில், குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமத்து வாசிகளுக்கு எஸ்கலேட்டர் மூலம் ஏறிச்செல்ல தெரியாது. இன்னும், ஒருசிலர் படியும் வேண்டாம், எக்ஸ்லேட்டரும் வேண்டாம் என குறுக்கு வழியை கண்டுபிடித்து தண்டவாளத்தில் குதித்து அடுத்தடுத்த நடைமேடைக்கு செல்கிறார்கள். ஆகவே, டிக்கெட் எடுத்துக்கொண்டு வருபவர்கள் இரண்டாவது நடைமேடைக்கு வந்ததும் விரைவில் ஏறிச்செல்ல இந்தப்பக்கமும், அதேபோல் இறங்கி செல்ல மறுபக்கமும் எஸ்கலேட்டர் அமைக்காவிட்டால், தற்போது ஏறுவதற்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்லேட்டரை பயணிகள் பயன்படுத்த மாட்டார்கள் என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

*நூற்றாண்டுகளை கடந்த நிலையம்
செங்கல்பட்டு ரயில் நிலையம் ஆங்கிலயர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. இங்கு, சுதந்திரத்திற்கு முன்பு காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் ஆகியோர்‌ ரயில்‌ பயணத்தின்போது செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் இறங்கி பார்த்துவிட்டு சென்றுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரயில்வே மந்திரியாக இருந்த செங்கல்பட்டை சேர்ந்த அளகேசன், இந்த ரயில் நிலைய வளர்ச்சிக்காக பல்வேறு‌ முயற்சிகளை எடுத்துள்ளார். நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரியமான ரயில் நிலையமாக விளங்குகிறது.

* சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு ரயில் நிலையம் மிகவும் பழமையான ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் 9 பிளாட்பார்ம் வசதி உள்ளது. ரயில் பயணிகள் பல வருடங்களாக படியில் ஏறி தான் அடுத்த பிளாட்பாரம் சென்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் எஸ்கலேட்டர் வசதி ஒரே ஒரு பிளாட்பார்மில் ஏறுவதற்கு மட்டுமே போடப்பட்டது. அதுவும் ரிப்பேர் ஆகி உள்ளது. இதனால் வழக்கம் போல பயணிகள் படியில் ஏறியே அடுத்த பிளாட்பார்முக்கு சென்று ரயிலில் பயணிக்கின்றனர். இதனை விரைவில் பயணி பயன்பாட்டிற்கு கொணடு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

*தொலை தூர ரயில்களுக்கு தண்ணீர்
செங்கல்பட்டு ரயில்வே சந்திப்பு உள்ளதால், வெளிமாநில ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்கு பிறகு செங்கல்பட்டு தான் பெரிய சந்திப்பு ரயில் நிலையமாக உள்ளது. இங்கு கொளவாய் ஏரி தண்ணீர் வசதி உள்ளதால், சரக்கு ரயில்கள், தொலைதூர ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், விரைவு ரயில்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் ரயில்கள் கழுவுவதற்கு இந்த செங்கல்பட்டு ஜங்ஷன் ரயில் நிலையம் பயன்படுகிறது. குடிநீர் நிரப்பவும் ரயில் கழிப்பறைகள், குளிப்பதற்கும் தேவையான தண்ணீர் நிரப்ப இந்த ரயில் நிலையம் மிக முக்கியமாக உள்ளது. சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இங்குள்ள கொலவாய் ஏரி மூலம் தண்ணீர் ரயில்களில் நிரப்பி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* பல்வேறு வசதிகள் உண்டு
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அனைத்து விதமான ரயில் முன்பதிவு கவுன்டர்கள் உள்ளதால், விரைவு ரயில்கள், மின்சார புறநகர் ரயில்கள் வெளி மாநில ரயில்களுக்கு இங்கு எளிமையாக ரயில் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும். அதோடு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் ஏராளமான கிராம மக்கள் இங்குள்ள மாடி பார்க்கிங் வசதி கொண்ட டூவீலர் பார்க்கிங்கில் தங்களது டூவீலர்களை நிறுத்திவிட்டு பாதுகாப்பாக செல்கின்றனர். அதோடு இங்கு நவீன கேன்டின் வசதி, தபால் அலுவலகம், ரயில்வே உணவகம், ரயில் பயணிகள் வஸ்திக்காக ஓய்வு அறை உள்ளிட்டவைகள் உள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!