ஈரோடு மண்டலத்தில் 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கம்; அன்றாட பணிகள் பாதிக்கவில்லை

*அதிகாரிகள் தகவல்

ஈரோடு : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் வரவு செலவு வித்தியாச தொகையை, அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், அண்ணா தொழிற்சங்க பேரவை, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கத்தினர் உட்பட 26 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால், அறிவித்தபடி வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதன்படி, மாநிலம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே உள்ள பணி மனையில் நேற்று அதிகாலை முதலே போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்க்ள திரண்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேசமயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க ஊழியர்களை தவிர மீதமுள்ள தொமுச மற்றும் கம்யூனிஸ்ட், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர் நேற்று அதிகாலை முதலே வழக்கம்போல் பணிக்கு வந்து, தங்களது பணிகளை மேற்கொண்டனர்.

பணி மனை முன் மறியல்: ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்பு நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். இதனால் மாற்று சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் பணிக்கு வந்து பஸ்சை இயக்கினர். அப்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பணிமனை முன் மறியலில் ஈடுபட்டு, பஸ்சை இயக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டத்தை தொடர தடையில்லை, ஆனால் பணிக்கு வரும் ஊழியர்களை பணி செய்யக்கூடாது என வலியுறுத்துவது, சட்டப்படி தவறு என கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, கலைந்தனர். இதன்காரணமாக அதிகாலையில் 3.15 மணிக்கு எடுக்க வேண்டிய அரசு பஸ்கள் 30 நிமிடம் தாமதமாக 3.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

அதன்பின், எவ்வித இடையூறும் இல்லாமல் பணி மனையில் இருந்து வழக்கம்போல ஒவ்வொரு பேருந்தும் இயக்கப்பட்டது. மேலும், அசாம்பாவித சம்பவங்களை தடுக்க பணி மனை முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மறியல் போராட்டத்தால் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
90 சதவீத பஸ்கள் இயக்கம்:

அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தில் 13 கிளைகளில் மொத்தம் 724 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினரை தவிர மாற்று தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மூலம் வழக்கம்போல நேற்று பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால், நேற்று காலை 6 மணி 13 கிளைகளிலும் இயக்க வேண்டிய 341 பஸ்களில் 91.79 சதவீதம் அதாவது 313 அரசு பஸ்களும், தொடர்ந்து 8 மணி நிலவரப்படி இயக்க வேண்டிய பஸ்களில் 83 சதவீதம் அதாவது 550 பஸ்களும், 1 மணி நிலவரப்படி 90 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டது.

இதில், தற்காலிக ஊழியர்கள், பணி முடிந்து ஓய்வில் இருந்த ஊழியர்கள், விடுமுறையில் சென்ற ஊழியர்களை பணிக்கு வரவழைத்து பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், சில வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருந்த டவுன் பஸ்களும் மதியத்திற்கு மேல் வழக்கம்போல இயக்கப்பட்டதாக ஈரோடு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட வேண்டிய 90 சதவீத அரசு பஸ்களும் வழக்கம்போல இயக்கப்பட்டதால், மக்கள் தங்களது அன்றாட பணிகளை அரசு பஸ்களின் மூலம் எவ்வித சிரமமும் இன்றி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்