ஈரோடு வேப்பம்பாளையத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி பலி: 30 பேர் காயம்

ஈரோடு: ஈரோடு வேப்பம்பாளையத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பி.பி.ஏ 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கர்நாடகா மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா செல்வதற்காக தனியார் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்களை ஏற்றி கொண்டு பேருந்து கிளம்பிய நிலையில் கல்லூரி நுழைவு வாயிலிலிருந்து சிறிது தொலைவில் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளில் 40கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழுவினர், தீயணைப்பு போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலர் காயமடைந்தவர்களை 6க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்களில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

இந்த விபத்தில் பேருந்து அடியில் சிக்கி ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். காயமடைந்த மாணவர்களை ஈரோடு அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்தும் விபத்து நிகழ்ந்ததை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இந்த விபத்து குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை