ஈரோட்டில் மீண்டும் திறக்கப்பட்ட மாநகராட்சி ஜவுளி சந்தை: வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக தகவல்

ஈரோடு: புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தையான கனி மார்க்கெட் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து 40 நாட்களுக்கு பின் மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட தொடங்கியது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே அப்துல் கனி மார்க்கெட் என்ற ஜவுளி சந்தையில் சுமார் 1000 கடைகள் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டதால் இங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. புதிய வணிக வளாகத்தில் மாத வாடகையாக ரூ.31,500-யும், வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை நிர்ணயித்ததால் வியாபாரிகள் ஏலத்தில் எடுக்க முடியவில்லை.

இதனால் வணிக வளாகம் ஓராண்டாகியும் செயல்படவில்லை. இதற்கிடையே ஜவுளி சந்தையில் இருந்த கடைகளை மாநகராட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் இடித்து அகற்றியது. பின்னர் வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை பழைய இடத்தில் கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் கனி மார்க்கெட் பழைய இடத்தில் செயல்பட தொடங்கியது. இதனிடையே புதிய வணிக வளாகத்தில் தங்களுக்கு நிரந்தர கடைகளை மாநகராட்சி ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், மற்ற தினங்கள் விட செவ்வாய் கிழமை வாரச்சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வருவது வழக்கம். நேற்று நடைபெற்ற சந்தையில் குறைந்த அளவு வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கூறினர். எனினும் வரும் வாரங்களில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு