ஈரோட்டில் புகார் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற ஜவுளி வியாபாரி மீது வழக்குப்பதிவு

ஈரோடு : ஈரோட்டில், தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஜவுளி வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு சாஸ்திரி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் முகமது அலி (46). ஜவுளி வியாபாரி. இவர், திருப்பூரை சேர்ந்த ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் ராதாகிருஷ்ணன் ரூ.16 லட்சம் தொகையை கொடுக்க வேண்டும். இதற்காக ராதாகிருஷ்ணன் வங்கி காசோலையை முகமது அலியிடம் கொடுத்துள்ளார். அதிலும் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே முகமது அலி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், முகமது அலி நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்து, திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அங்கு இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முகமது அலியை ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது பணத்தை ராதாகிருஷ்ணன் திரும்ப தராததாலும், தன் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததாலும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக முகமது அலி தெரிவித்தார். இதையடுத்து, முகமது அலி மீது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை மறைத்து எடுத்து வந்த பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு