எர்ணாகுளம் அருகே ரயிலில் கடத்தி வந்த ₹50 லட்சம் போதை பொருள் பறிமுதல்; இளம்பெண் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலுவா ரயில் நிலையத்தில் டெல்லியில் இருந்து ₹50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருளை வாட்டர் ஹீட்டருக்குள் மறைத்து கடத்திய பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் போதைப் பொருள் பயன்பாடும், விற்பனையும் சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. டெல்லி, பெங்களூரு உள்பட நகரங்களில் இருந்துதான் பெரும்பாலும் எம்டிஎம்ஏ உள்பட போதைப் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை தடுப்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து, கேரளாவுக்கு வரும் ரயில்களிலும், பஸ்கள் உள்பட வாகனங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து ஆலுவா வரும் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக எர்ணாகுளம் எஸ்பி வைபவ் சக்சேனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து நேற்றிரவு ஆலுவா வந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் இருந்த பேக்கை திறந்து சோதனை நடத்தினர். அதில் ஒரு வாட்டர் ஹீட்டர் இருந்தது. திறந்து பரிசோதித்த போது அதற்குள் 1 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். அவர் பெங்களூருவை சேர்ந்த சர்மீன் அக்தர் (26) என தெரியவந்தது.

இவர் இதற்கு முன்பும் பலமுறை டெல்லியில் இருந்து போதைப் பொருளை கேரளாவுக்கு கடத்தியதும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் ெதாடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ₹50 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது