Monday, July 1, 2024
Home » சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான காலநிலை செயல் திட்ட கையேடு வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான காலநிலை செயல் திட்ட கையேடு வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று (13.6.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேட்டினை வெளியிட்டார். இத்திட்டம், 2050ஆம் ஆண்டிற்குள் சென்னை மாநகரம் கார்பன் சமன்பாட்டை எட்டுவதற்கும், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு நோக்கமான 2070 ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் இலக்கை எட்டுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பருவநிலை மாற்ற தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (ஐபிசிசி) கடல் மட்ட உயர்வு, கடுமையான அதிக வெப்பநிலை மற்றும் சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு காலநிலை பாதிப்புகளால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றால் கடுமையான சேதங்கள் வரவிருப்பதை எச்சரிக்கிறது. கடற்கரை நகரமான சென்னை போன்ற நகரத்திற்கான காலநிலை செயல்திட்டமானது, உள்ளூர் அளவில் செயல்படுத்தப்படும் அறிவியல் அடிப்படை கொண்ட நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை காலநிலை செயல் திட்டமானது, சென்னையை காலநிலை மீள்தன்மை கொண்ட செயலூக்கம் உள்ள நகரமாக மாற்றுவற்கான முக்கியமான முதல் படியாகும். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மாசினை குறைத்து, காலநிலை சவால்களை எதிர்கொள்ளவும், மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.

காலநிலை மாற்ற நிகழ்வுகளை காணும்போது, மனித செயல்பாட்டிற்கும், காலநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பு முன்னிலை படுத்தப்படுகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம், தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவற்றால், நமது மாநிலம் காலநிலை மாற்றத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது.
சென்னை காலநிலை செயல் திட்டமானது, தமிழ்நாடு மாநில காலநிலை மாற்றம் குறித்த செயல் திட்டத்துடன் ஒன்றி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களான புயல், வெள்ளம் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

அரசின் ஈடுபாடும் மற்றும் தலைமை பண்பும் ஒரு லட்சியமிக்க காலநிலை செயல் திட்டத்தை உருவாக்கிட முடியும் என்பதற்கு சென்னை முன்னுதரானமாக விளங்குகிறது. இது குறிப்பாக உலகின் தெற்கு பகுதியில் அதிக காலநிலை அபாயம் உள்ள நகரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சென்னை காலநிலை செயல் திட்டமானது, C40 நகரங்கள் ஆதரவுடன், அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இச்செயல்திட்டமானது கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கமான 2018-19 உமிழ்வு அளவுகளுடன் ஒப்பிடுகையில், 2030 ஆம் ஆண்டில் 1% அதிகரிப்பு, 2040 இல் 40% குறைதல் மற்றும் 2050 ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை அடைவற்கான, பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களுடன் ஒத்துப்போகிறது. இத்திட்டம் ஆறு முன்னுரிமை பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ள கவனம் செலுத்துகிறது.

* மின் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Electrical grid and renewable energy):

சென்னை அதன் காலநிலை செயல்திட்டத்தின் மூலம் 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் இருந்து 93% மின்சாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.

* வணிக கட்டடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை கட்டமைத்தல் (Building energy):

2050 ஆம் ஆண்டுக்குள் சென்னையின் 100% வணிகக் கட்டடங்களில் அதிக திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படும்.

* நிலையான போக்குவரத்து (Sustainable transport):

சென்னையில் 2050 ஆம் ஆண்டுக்குள், நிலையான போக்குவரத்து இயக்கத்ததை ஊக்குவிப்பதற்கு 80% நகர உட்போக்குவரத்தை பொதுபோக்குவரத்து மூலம் அடையவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கவும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை 100% மின்மயமாக்குதல் மற்றும் தனியார் வாகனங்களின் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் இலக்குகளுடன் செயல்படும்.

* திடக்கழிவு மேலாண்மை (Solid waste management):

சென்னை நகரின் திடக்கழிவுகளை 100% மேலாண்மை செயக்கக்கூடிய திறமையான, பயனுள்ள மற்றும் மீள்திறன் கொண்ட கழிவு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* நகர்ப்புற வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை (Urban flooding and water scarcity):

சென்னையை “தண்ணீர்-செயல்திறன்” மிக்க நகரமாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, 2050 ஆம் ஆண்டுக்குள் நகரத்தின் 35% பகுதியில் நகர்ப்புற இயற்கையை விரிவுபடுத்தும் நோக்கம் செயல்படுத்தப்படும்.

* பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினர் மற்றும் சுகாதாரம் (Vulnerable populations and health):

சென்னையில் வெள்ள அபாய மண்டலங்களுக்குள் வசிக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மறுவாழ்வு, வெப்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் பரவலாக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பிற்காக தற்போதுள்ள குடிசை வீடுகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றால் “அனைவருக்கும் அழிவில்லாத காலநிலை” ஆதாரத்தை நோக்கி சென்னை நகரம் செயல்படும்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர். சிவ.வீ. மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர்
வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதி C40 மண்டல இயக்குநர் ஸ்ருதி நாராயண், C40 நகர ஆலோசகர் .பெஞ்சமின் மேத்யூஸ் ஜான், நகர மேலாண்மை மையம் அகமதாபாத் இயக்குநர் மன்விதா பராடி, துணை இயக்குநர் மேகனா மல்கோத்ரா, சென்னை காலநிலை செயல் திட்ட குழுத்தலைவர் பி.ஜெயபால், நகர மேலாண்மை மையம் – அகமாபாத் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுவேதா தில்வாதியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

eighteen − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi