செம்மண் நிறத்தில் மாறிய எண்ணூர் முகத்துவாரம்

திருவொற்றியூர்: எண்ணூர் பகுதியை சேர்ந்த காட்டுக்குப்பம் முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம் போன்ற 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், முகத்துவார ஆற்றில் இறால், நண்டு, மீன் போன்றவைகளை பிடித்து, தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சுடுநீர் மற்றும் சாம்பல் கழிவுகளால் முகத்துவாரத்தில் மீன்கள் இனப்பெருக்கம் தடைபடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை முகத்துவார ஆற்று நீர் செம்மண் நிறமாகி, எண்ணெய் படலம் மிதந்து காட்சியளித்தது. இதை பார்த்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே, அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சுடுநீர் மற்றும் சாம்பல் கழிவுகளால் முகத்துவாரம் முற்றிலும் பாழாகி உள்ளது. அடிக்கடி இது போன்ற ரசாயன கழிவுகள் முகத்துவாரத்தில் கலந்து வருவதால் மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் அடியோடு பாதிக்கிறது. எனவே தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கவனித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related posts

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்