எண்ணூரில் கனமழை வெள்ளத்தின்போது வீட்டில் ரூ.3 லட்சம் திருடியவர் 8 மாதங்களுக்கு பிறகு கைது

திருவொற்றியூர்: எண்ணூரில் கனமழை வெள்ளத்தின்போது, பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 8 மாதங்களுக்கு பிறகு ஆசாமி கைது செய்யப்பட்டார். எர்ணாவூர், கன்னிலால் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேலு(52), தனியார் நிறுவன ஊழியர். கடந்தாண்டு, டிசம்பர் 6ம் தேதி பெய்த கனமழையின் போது இவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மழைநீர் வற்றியதும் டிச. 18ம் தேதி வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். வெள்ள காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியும் இயங்காததால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், போலீசார் பழைய குற்றவாளிகளை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், கொள்ளையில் ஈடுபட்டது எர்ணாவூர் எர்ணீஸ்வரர் நகரை சேர்ந்த சூர்யா(32) என தெரிய வந்தது. இதைடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சத்தை திருடியதாக ஒப்புக் கொண்டார். அந்த பணத்தை மது அருந்துவது, உல்லாசமாக இருப்பது என செலவு செய்தது தெரியவந்தது. இவர் ஏற்கனவே இதுபோல் பல திருட்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு