எண்ணூர் பகுதியில் அமோனியா கசிவு; தமிழக அரசிடம் அறிக்கை பெற்ற பின் முடிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

தண்டையார்பேட்டை: 10வது கட்ட சாகர் பரிக்ரமா பயணத்தை ஒன்றிய மீன்வள துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலோர காவல் படையின் சுஜெய் கப்பலில் நெல்லூருக்கு பயணம் மேற்கொண்டார். இதில் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்தாண்டு இந்த பயணம் குஜராத்தில் தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையின் நோக்கம் ஒன்றிய அமைச்சர் மீனவர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனை நடத்தி, ஒன்றிய அரசின் திட்டங்களை எடுத்து செல்லுதல், புதிய பயனாளிகளை கண்டுபிடித்தல், பயன்களை கொடுத்தல்தான் இதன் நோக்கம்.

முதன்முறையாக 2019ல் மீனவர்களுக்கு தனித்துறை ஆரம்பித்து 38500 கோடி துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதியில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். கடல்சார் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 4ம் இடத்திலும் உள்ளோம். நாளை பிரதமர் மோடி, திருச்சிக்கு வந்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ் மக்கள், பண்பாடு, கலாச்சாரம் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.

அதனால் தான் நேற்று காசி தமிழ் சங்கம் நடத்தி அது நேற்று நிறைவு பெற்றிருக்கிறது. எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவு தொடர்பாக சமந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தமிழக அரசிடம் அறிக்கை மூலம் தெரிந்த பிறகு தான் அது குறித்து முடிவு எடுக்கப்படும். மீனவத்துறையும் முன்னேற வேண்டும், தொழிற்துறையும் முன்னேற வேண்டும். அப்போது தான் தேசம் மிக பெரிய வளர்ச்சி அடையும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்துறைகளை நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி.க்கு உள்ஒதுக்கீடு செல்லும்: மாநிலங்களுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது