எண்ணூரில் 6வது நாளாக எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி: ஒடிசாவிலிருந்து வந்த ஸ்கிம்மர் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6வது நாளாக எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. இந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றைக் கடந்து கடலில் கலந்ததால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சிபிசிஎஸ் ஊழியர்கள் 100 படகுகளில் எண்ணெய் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசுடன் தற்போது மும்பையைச் சேர்ந்த ‘சீ கேர் மரைன் சர்வீசஸ்’ என்ற நிறுவனமும் கைகோர்த்துள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் வல்லுநர் குழு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசாவிலிருந்து அதிதிறன் கொண்ட ஸ்கிம்மர் இயந்திரம் வழவழைக்கப்பட்டு இருக்கிறது. ஒடிசாவில் இருக்கக்கூடிய ஐஓசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்கிம்மர் இயந்திரம் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2 ஸ்கிம்மர் இயந்திரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்கிம்மர் இயந்திரம் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு 16,000 லிட்டர் வரை எண்ணெய் கழிவுகளை பிரித்து எடுப்பதற்கு இந்த இயந்திரம் மிகவும் உதவியாக உள்ளது. நேற்று முன்தினம் வரை 36,000 லிட்டர் எண்ணெய் கழிவுகளை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் இந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று சூழல் இருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!