ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கோயில்களில் அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கான அனுமதிக்கப்பட்டனர். 2023ம் ஆண்டு முடிந்து 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி, தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதல் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், கே.கே.நகர் சித்திபுத்தி விநாயகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

அதிகாலை முதலே கோயில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை தி.நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முருகப்பெருமான் தங்க நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.

பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. அதேபோன்று தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சென்னையில், சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம், மயிலாப்பூர் லஸ் பிரகாச மாதா தேவாலயம், அண்ணாசாலை மேம்பாலத்தின் அருகில் உள்ள கதீட்ரல் தேவாலயம், சூளைகேடு வருமரசர் தேவாலயம், அடையாறில் உள்ள இயேசு அன்பர் கிறிஸ்தவ தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், எழும்பூரில் செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு